‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை மேலும் நீண்டு கொண்டே செல்கிறது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) ரிவைசிங் கமிட்டிக்காக திட்டமிடப்பட்டிருந்த திரையிடல் மீண்டும் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் வெளியீடு குறித்து இன்னும் தெளிவான விடை கிடைக்காததால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'ஜன நாயகன்' படத்தைப் பார்க்க ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் வராததால், திரையிடல் தள்ளிப் போனது. படக்குழுவினர் மாலை 6 மணி வரை காத்திருந்தும் எந்த தகவலும் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் படக்குழு கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.
சென்னை CBFC அலுவலகத்தில் தற்போது நிரந்தர குழு உறுப்பினர்கள் இல்லாததே இந்த தாமதத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. முன்பு பதவி வகித்த நடிகர் எஸ்வி சேகரின் பதவிக் காலம் முடிந்த பிறகு, புதிய உறுப்பினர்கள் நியமனம் நடைபெறாததால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகன் திரைப்படம்
இதன் காரணமாக, ஹைதராபாத்தை சேர்ந்த ஜீவித சந்திரசேகர் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த டிஎஸ் நாகாபரணா ஆகியோர் சென்னை வந்து திரையிடலில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வராததால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு 'ஜன நாயகன்' படத்தின் திரையிடல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர், ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது மார்ச் 17-க்கு மாற்றப்பட்டது. ஆனால் இப்போது அந்த தேதியிலும் திரையிடல் நடைபெறாததால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
தணிக்கைச் சான்று சர்ச்சை
ஜனநாயகன் படம், நடிகர் விஜய் தனது முழுநேர அரசியல் பயணத்திற்கு முன் நடிக்கும் கடைசி திரைப்படமாகக் கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆரம்பத்தில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் வெளியீடு காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 6-ஆம் தேதி படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தினை அணுகி சென்சார் நடைமுறையை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தது. இதனால் சிபிஎஃப்சி மற்றும் படக்குழுவுக்கு இடையே சட்டப்போராட்டம் ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பின்னர் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட மறுத்து வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியது. சட்டநடவடிக்கை நீண்டு கொண்டே செல்லும் வாய்ப்பு இருப்பதால், இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, ரிவைசிங் கமிட்டி வழியாக சென்சார் சான்றிதழை பெற முயற்சிக்க தீர்மானித்தது.
விஜய் படம் வெளியீட்டு பிரச்சனை
ஆனால், தற்போது அந்த முயற்சியும் பலனளிக்கததால், 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் குழப்பமே நிலவுகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி கலக்கிய நிலையில், படம் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிப்தியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications