அரசியல் கட்சிக்கான எந்த இலக்கணமும் இல்லாத தமிழக வெற்றிக் கழகம்.. விஜய் தோற்றது இங்குதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் புதிய முகமாக களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் "மாற்றத்திற்கான அரசியல்" எனக் கூறி புது பாணியில் பிரசாரம் நடத்தி வருகிறார். ஆனால், அந்த பாணி பலரை பலி கொடுக்கும் அளவுக்கு போய்விட்டதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.

கட்சிகளின் கட்டமைப்பு

திமுக, அதிமுக போன்ற நீண்ட கால கட்சிகள், வேரோடு பரவிய வலுவான நிர்வாகக் கட்டமைப்பால் தான் கூட்ட நெரிசலை சமாளித்து வந்துள்ளன. இரண்டாம் கட்ட தலைவர்கள் இதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். தொண்டர்களை உள்ளூர் நிர்வாகிகள் அழைத்து வருகிறார்கள். கூட்ட இடங்களில் ஒழுங்கைப் பேணுகிறார்கள். கட்டுப்பாட்டுடன் மக்கள் இயக்கப்படுகிறார்கள்.

vijay tvk

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் இன்னும் இத்தகைய வலுவான அமைப்பைக் கட்டியெழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் அது இன்னும் கட்சியாகவே கட்டமைக்கப்படவில்லை. ரசிகர் கூட்டமாகவே உள்ளது. அங்கு விஜயை தவிர யாருமே இல்லை. எனவே தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதை போல ரசிகர்கள், சுற்றி வருகிறார்கள். வீடியோ எடுத்து அதை ரீல்சாக போடவே கவனமாக உள்ளனர்.

'காட்சிப் பொருள்' போன்று விஜய்?

விஜய் தனது பஸ்ஸிலிருந்தபடி லைட் ஆன்-ஆஃப் செய்து ரசிகர்களை மகிழ்விப்பது, ஒரு "தரிசனம்" போல காட்சியளிக்கிறது. அரசியல் தலைவராகவே நடந்து கொள்ள வேண்டிய நேரத்தில், இன்னும் சினிமா ஹீரோவாகவே தோன்றுகிறார் என்ற கருத்து பரவுகிறது.

மரங்களின் மீது ஏறி, மின்மாற்றிகளின் மீது ஏறி, பல மணி நேரம் கால்கடுக்க நிற்கும் ரசிகர்களின் காட்சிகள், இது பக்குவப்படாத கூட்டம் என்பதை அம்பலப்படுத்துகிறது.

காவல்துறைக்கே சவாலான கூட்டம்

கரூர் சம்பவத்தில் கூட, காவல்துறையினரால் கூட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு காவலர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். "ரசிகர்களின் பரவசத்தை அடக்க, காவல்துறை மட்டும் போதாது; கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாடே அவசியம்" என போலீஸ் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

விராட் கோலியை பார்க்க வேண்டும் என்று கூடிய கூட்டத்தால்தானே பெங்களூர் ஆர்சிபி வெற்றி ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடந்தது? காவல்துறையும் மனிதர்கள்தானே என்ன செய்ய முடியும். ஒரு கட்டத்திற்கு மேலே அவர்கள் உயிரை காப்பாற்றுவதே அவர்களுக்கு சவாலாக மாறிவிடுகிறது. மாற்றிவிடுகிறார்கள் இந்த கும்பல் மனநிலை கூட்டத்தினர்.

விஜய் தோல்வி

விஜய்யும் கூட 41 பேர் பலியான நேரத்தில் அரசியல் தலைவராக செயல்படவில்லை. அல்லது யோசிக்க கூட தெரியவில்லை. ஓட்டம் பிடித்து சென்னை போனாரே தவிர தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படியாகிவிட்டதே என்று பதறவில்லை. போலீசாரிடம் தடியடி வாங்கினாலும் பரவாயில்லை என்று மருத்துவமனைக்கு விரையவில்லை. மக்களுக்கான தலைவர்கள் இப்படித்தான் மக்களை நோக்கி ஓடியுள்ளனர்.

சென்னை வெள்ளத்தில் கூட வேட்டியை மடித்துக் கட்டி வேலை பார்த்தனர். மிஸா நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்தான் ஸ்டாலின். வைகோ காணாத சிறையில்லை. கருணாநிதி கூட பொய் கேசுக்காக சிறை தள்ளப்பட்டவர்தான். ஆனால், சொகுசாக சில்வர் ஸ்பூனுடன் பிறந்த விஜய், சொகுசு விமானத்தில் பறந்து, சொகுசு பங்களாவில் தஞ்சமடைந்ததை தமிழக வரலாறு எப்படி மன்னிக்கும்?

"எனது புகழுக்காக ஓட்டு வரும். நான் முதல்வராவேன்." இந்த எண்ணம் மட்டுமே மனம், புத்தி முழுக்க விஜய்க்கு வியாபித்துள்ளது. என்னை பார்க்க வருவோரை பவுன்சர்கள் கீழே தள்ளி விட்டாலும் அதை பற்றி கவலை கொள்ள மாட்டேன். பைக் எனது பஸ் சக்கரத்திற்குள் சிக்கினாலும் எட்டிப் பார்த்து, தள்ளிப்போங்க என சொல்ல மாட்டேன், டிரான்ஸ்பார்மர் மீது நிற்கும் ரசிகர்களை கீழே இறங்க சொல்ல மாட்டேன் என்ற விஜய் மனநிலை ஒரு அரசியல் தலைவர் மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இப்படி ஒரு அரசியல் தலைவர் இருக்க முடியாது. இருந்தால் அவர் அரசியல் தலைவராகவே இருக்க முடியாது. எந்த அரசியல் கட்சியினராவது தனது கொடியை கீழே போட்டு மிதிப்பார்களா. ஆனால் விஜய் கூட்டத்தில் அதுதான் நடந்தது. எந்த உணர்வும் இல்லாமல் அதையும் மிதித்து கடந்தவர்தான் விஜய்.

எதிர்காலத்துக்கு எச்சரிக்கை

அரசியலில் நீண்ட பயணத்தை நோக்கமாகக் கொண்டால், தமிழக வெற்றிக் கழகம் உடனடியாக வலுவான நிர்வாகக் கட்டமைப்பு, கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், விஜய் அதற்கு சரிபட்டுவருவார் என்று நிஜமாகவே தோன்றவில்லை. அவரும் அவரது ரசிகர்களும் ஒரு மாய உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டுள்ளனர். விஜயை விமர்சிப்போர் வில்லன்களாக தெரிகிறார்கள். திரைப்படம் அப்படித்தானே கட்டமைத்து வைத்துள்ளது. ஆனால் இதனையும் மீறி விஜய் அரசியல் கட்சி நடத்த ஆசைப்பட்டால் உடனே சுதாரிக்க வேண்டும். இல்லையேல், "விஜய்யின் அரசியல் தொடக்கமே மக்களின் உயிர் பலி கேட்கிறதா?" என்ற கடுமையான கேள்வி தமிழக அரசியல் அரங்கில் நீடிக்கத் தவறாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+