ஸ்டாலினை டச் பண்ண முடியாது.. அதிமுக + தவெக = திமுகவுக்கு லாபம்! சிஎம் டேபிளில் உளவுத்துறை ரிப்போர்ட்
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) எந்த வகையில் செயல்படப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. இதேசமயம், அந்தக் கட்சி அ.தி.மு.க. அல்லது பா.ஜ. உடன் கூட்டணி அமைத்தால் தி.மு.க.வுக்கு லாபமாகவும், ஆனால் தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு சிக்கலாகவும் இருக்கும் என உளவுத்துறை மாநில அரசுக்கு மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர், மாநிலம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் இறங்கினார். 120 மாவட்டச் செயலர்கள் நியமனம் செய்யப்பட்டு, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கான பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மாவட்டங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்பு, தொண்டர் சந்திப்பு நடத்தி கட்சி அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியை விஜய் தொடங்கினார். ஆனால் கரூரில் நடந்த ஒரு பிரசார நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தது அவரது அரசியல் பயணத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் கட்சி
அந்தச் சம்பவத்திலிருந்து மீளாத நிலையில், விஜய் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காதது கட்சித் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மந்தமாகி விட்டன என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, விஜயை தங்களது கூட்டணிக்குள் இழுக்க அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. தரப்பினரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அதிமுக பாஜக கூட்டணி
இரு கட்சிகளிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் த.மா.கா. தலைவர் வாசன் உள்ளிட்டோர் த.வெ.க. தரப்பினருடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், த.வெ.க. எந்தக் கட்சியுடன் இணைந்தாலும் அதனால் யாருக்கு லாபம், யாருக்கு இழப்பு என உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய ஆய்வின் அடிப்படையில் ஒரு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, த.வெ.க. தனித்து போட்டியிட்டால் 10 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகளைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதில் இளைஞர்கள், இளம்பெண்கள், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டிற்கும் விருப்பமில்லாத வாக்காளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கை
மேலும், சிறுபான்மை சமூகங்களின் ஓட்டுகள் மற்றும் பட்டியலின மக்களின் ஓட்டுகளும் கணிசமான அளவில் விஜய்க்கு செல்லக்கூடும். இது தி.மு.க.வுக்கு சவாலாக மாறும். ஆனால், த.வெ.க. அ.தி.மு.க. அல்லது பா.ஜ. உடன் கூட்டணி அமைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே திரும்பும் என்பதால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணி விவாதம்
அதேநேரம், த.வெ.க. காங்கிரஸ் மற்றும் வி.சி. (விடுதலை சிறுத்தைகள்) போன்ற கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது முன்னணியை உருவாக்கினால், தி.மு.க. கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உளவுத்துறை அறிக்கையை தி.மு.க. தலைமை கவனமாக ஆய்வு செய்து வருவதாகவும், அதன்படி தேர்தல் தந்திரங்கள் திட்டமிடப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், விஜயின் த.வெ.க. எந்த முடிவை எடுக்கிறது என்பதை பொறுத்தே தமிழக அரசியல் சமன்பாடுகள் மாற வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலை ஆய்வு செய்யும் போது விஜய் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது. இல்லையேல் தனித்து போட்டியிடவே வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications