திருச்சி அரசு மருத்துவமனையில் நைசாக பேசி தாயிடம் இருந்து குழந்தை திருட்டு.. பாய்ந்து வந்த விஜய்!
சென்னை: "மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே குழந்தை திருடப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்" என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. நிறைமாத கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11 ஆம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார்.

இந்நிலையில் அதே பிரிவில், சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் சுகன்யாவிடம் அறிமுகமாகி உள்ளார். தன் பெயர் மீனாட்சி என கூறி சுகன்யாவிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவ்வப்போது சுகன்யாவிற்கு அந்த பெண் உதவியும் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என்று சுகன்யா அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்போது அந்த பெண் நான் சென்று தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன். நீ இங்கேயே இரு.. என குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா மருத்துவமனையில் தேடினார். ஆனால், அந்த பெண்ணையும், குழந்தையும் காணவில்லை. சுகன்யாவின் உறவினர்களும் மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications