மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்ட சூழலில், புஸ்ஸி ஆனந்த் தரப்பு ஏகத்திற்கும் மகிழ்ச்சியாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தவெகவில் விஜய்க்கு பின் புஸ்ஸி ஆனந்த் என்று இருந்த நிலையை மாற்ற ஆதவ் அர்ஜுனா தீவிரமாக பணியாற்றி வந்தார். தற்போது ஆதவ் அர்ஜுனாவின் முயற்சிகளுக்கு தடை ஏற்பட்டிருப்பதே மகிழ்ச்சிக்கு காரணமாம்.
தவெக தொடங்கப்பட்ட நாள் முதலே விஜய்க்கு பின் புஸ்ஸி ஆனந்த் என்ற நிலை தான் இருந்து வந்தது. ஆனால் கட்சியின் 2வது இடத்தை பிடிக்க ஆதவ் அர்ஜுனா தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டார். அதேபோல் ஆதவ் அர்ஜுனா கட்சியின் செலவுகள் பார்த்து கொள்வார் என்பதோடு, தேர்தல் பணிகளை செய்த அனுபவம் இருக்கிறது விஜய் அவருக்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

இதன் காரணமாகவே ஆதவ் அர்ஜுனாவின் எல்லை மீறிய மேடை பேச்சுகளை கூட விஜய் கண்டுகொள்ளாமல் அமைதி காத்தார். ஆனால் இது புஸ்ஸி ஆனந்த் தரப்புக்கு சிக்கலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் தொகுதி பொறுப்பாளர்களில் பெயரில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையும் ஆதவ் அர்ஜுனா உடைத்துவிட்டார்.
தவெக நிர்வாகிகள் பலரும் சூசகமாக பேசி வந்த சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளும் பணிகளை விஜய் கவனித்து வந்திருக்கிறார். இப்படியான சூழலில் தான் கூட்டணி பேசுகிறேன் என்று முயற்சித்து புஸ்ஸி ஆனந்த் மாட்டிக் கொண்டார். அவர் மாவட்டச் செயலாளர்களிடம் பேசிய பேச்சுகள் கசிந்துவிட, விஜய் ஏகத்திற்கு டென்ஷனாகிவிட்டார்.
ஒரு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட ரகசியமாக நடத்த தெரியாதா என்று விஜய் கொந்தளித்துவிட்டதாக பனையூருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூறுகின்றனர். இதனால் விஜய்யை ஆதவ் அர்ஜுனா கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவிட்டதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் கொந்தளித்து கொண்டே இருந்திருக்கிறது.
இப்படியான சூழலில் தான் ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா வார்த்தையை விட்டிருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் நேரடியாக அறிக்கை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.. இதனால் வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கோரி இருக்கிறார். தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை வம்புக்கு இழுத்துவிட்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
சின்ன சின்ன அமைப்புகளின் வாக்குகளை கூட திமுக தங்கள் பக்கம் இழுக்க தயாராகி வரும் சூழலில், தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்கும் நபரை கடுமையாக சாடலாமா என்று ஆதவ் அர்ஜுனாவை நோக்கி தவெகவினரே பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் ஆதவ் அர்ஜுனாவின் வாய்க்கு பூட்டு போடும் முடிவு உருவாகும் என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications