Vijay: விஜய் பேச்சில் தெரிந்த மாற்றம்.. உற்று கவனித்த மாணவர்கள்! ஆஹா தேர்தல் களம் இப்போவே சூடுபிடிக்குதே
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் +2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்குவார். பொதுவாக இதுபோல நடக்கும் கல்வி விழாக்களில் விஜய் அரசியல் பேச மாட்டார். நேரடியாக மாணவர்களுக்கு அட்வைஸ் மட்டுமே தருவார். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக விஜய் அரசியல் பேசினார். தமிழகத்தில் நடக்கும் சட்டசபைத் தேர்தலையும் மத்திய அரசையும் குறிப்பிட்டு அவர் பேசினார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், இப்போது தவெக என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார். விஜய் இப்போது தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் சூழலில், மறுபுறம் அரசியல் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்றே வருகிறார்.

கல்வி நிகழ்ச்சி
இது மட்டுமின்றி 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த மார்க் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகளையும் விஜய் வழங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவ - மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கி வருகிறார். அதன்படி இன்றைய நாள் முதற்கட்ட விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில், இந்த ஆண்டு கல்வி விருது விழா இன்று தொடங்கி நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதற்கட்டமாக 88 சட்டமன்றத் தொகுதிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு விஜய் நேரடியாகப் பரிசுகளை வழங்குகிறார்.
விஜய் பேச்சில் தெரிந்த மாற்றம்
முன்னதாக பரிசுகளை வழங்கும் முன்பு அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர், மாணவிகளுடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். கல்வி விழாவாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டுதோறும் உரையாற்றுவார். அது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்தாண்டு விஜய்யின் உரையில் ஒரு மாற்றத்தைத் தெளிவாகத் தெரிந்தது.
அதாவது கல்வி விழா என்பதால் பொதுவாக இந்த நிகழ்வில் விஜய் அரசியல் பேச மாட்டார். மாணவர்களுக்கு நேரடியாக அறிவுரைகளை மட்டுமே வழங்குவார். ஆனால், இந்தாண்டு முதல்முறையாக விஜய் பேச்சில் அரசியல் இருந்தது. அவர் நேரடியாக எந்தவொரு அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என்றாலும் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதைக் குறிப்பிட்டே பேசியிருந்தார்.
சட்டசபைத் தேர்தல்
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், "மாணவர்களே உங்கள் வீட்டில் உள்ள பெற்றோரை ஜனநாயக கடைமை ஆற்றச் சொல்லுங்கள். ஜனநாயக கடமை என்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. இதுவரை ஊழலே செய்யாதவர்களைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். அதுவே நாட்டிற்கு நல்லது.
2 ஆண்டுகளுக்கு முன்பு நான் மாணவர்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டேன். அதாவது காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெல்ல முடியும் எனச் சிலர் நினைக்கிறார்கள். அந்த சிந்தனையை நாம் ஒழிக்க வேண்டும். அதைப் பின்பற்றுங்கள். ஆனால், அடுத்த வருடம் எல்லாரும் பணத்தை வண்டி வண்டியாகக் கொட்டப் போகிறார்கள். அவை எல்லாம் உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம் தான். அதை என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை" என்றார்.
மத்திய அரசு மீதும் விமர்சனம்
மேலும், மத்திய அரசு மீதும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மத்திய அரசு நடத்தும் தேர்வில் கூட பெரியாருக்கு சாதிய சாயம் பூச முயல்வதாகவும் அவர் விமர்சித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போதே அரசியல் களம் சூடாகியுள்ளது. இந்த சூழலில் விஜய்யின் பேச்சும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications