கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் விஜய்! ஆதரவு அளித்த கட்சியினருக்கு நேரில் நன்றி தெரிவிப்பு!
சென்னை: தவெக ஆட்சி அமைய கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஐயூஎம்எல் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விஜய் நேரில் சென்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கும் விஜய் சென்றார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது.

அது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பான்மைக்கான ஆதரவை பெற வேண்டுமானால் இரு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இது குறித்து இன்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்துகிறார். இவரது முடிவை நாளை சொல்வார் என தெரிகிறது.
திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பார்க்கிறது. அப்படி அமைந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் திருமாவளவன் என பேசப்பட்டது.
இது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஏதோ யூகத்தின் அடிப்படையில் பேசி வருகிறார்கள் என சொல்லப்பட்ட நிலையில் அதே கருத்தை தவெகவின் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.
அது போல் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் புதுவையில் இருந்து எம்எல்ஏக்கள் உடனே சென்னைக்கு வருமாறும் உத்தரவிட்டிருந்தார்.
அது போல் ஸ்டாலினும், தனது சட்ட வல்லுநர்களுடன் சில ஆலோசனைகளை நடத்தியிருந்தார். இதனால் அதிமுக- திமுக அரசு அமைகிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதிமுக- திமுக கூட்டணி அரசு அமையாது என டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் விஜய்க்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்று ஒரு முறை ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது 118 இடங்களுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைப்பதாக தெரிவித்துவிட்டார்.
தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து இரு நாட்களாக உயர்மட்ட குழுக்கள் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் விஜய்க்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன.
இதனால் தவெகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் விஜய்யின் பட்டினம்பாக்கம் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், அக்கட்சியின் சட்டசபை எம்எல்ஏக்களின் குழுத் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க விஜய் , கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகின.
முதலில் அந்த வகையில் 118 பேரின் ஆதரவு கடிதங்களை பெற்ற விஜய், ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநரிடம் பெரும்பான்மைக்கான கடிதங்களை கொடுத்தார். இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடியே தனக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தோழர் நல்லகண்ணுவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்ற விஜய்யை மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணனும் வரவேற்றனர். விஜய்யும் அவர்கள் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்தார். பின்னர் தனக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
