விஜய்க்கு ஃபுல் சப்போர்ட் கொடுப்பேன்.. அரசியலில் சாதிக்க நினைக்கிறார்! வெளிப்படையாக சொன்ன நடிகர்
சென்னை: ‛‛திரைத்துறையை விட்டு இன்னொரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நாங்கள் முழு சப்போர்ட் செய்வோம்'' என்று நடிகர் நரேன் தெரிவித்துள்ளார். இவர் நடிகர் விஜயின் கடைசி படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படி கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். முதல் அரசியல் மாநாட்டை அவர் நடத்திய பிறகு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ‛‛அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்'' என்ற நூல் வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

இந்த 2 மேடைகளில் நடிகர் விஜய் ஆளும் திமுக அரசை குறிவைத்து தாக்கி பேசினார். அதோடு புத்தக வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவனை வர விடாமல் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து கொள்ள முடிவதாக மறைமுகமாக திமுகவை விளாசினார்.
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள். மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார்.
இதன்மூலம் ஒவ்வொரு மேடைகளிலும் நடிகர் விஜய் தனது அரசியல் எதிரி திமுக தான். வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விஜய் வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே தான் நடிகர் விஜயின் அரசியல் கட்சிக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜயின் அரசியலுக்கு நடிகர் நரேன் வாழ்த்துடன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல மொழி படங்களில் நடித்தவர் நரேன். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, கோ, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜயின் கடைசி படத்திலும் நரேன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நடிகர் நரேன் வந்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதாவது, ‛‛நடிகர் விஜய் கடைசி படத்தில் மட்டுமே நடித்துவிட்டு அரசியலுக்கு செல்கிறார். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
அதற்கு நரேன், ‛‛அய்யய்யோ.. அதை நினைத்தாலே எனக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு நல்வாழ்த்துகள். அவர் என்னுடைய மனம்கவர்ந்த நடிகர். நம் மனம் கவர்ந்த நடிகர். இன்னொரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நாங்கள் முழு சப்போர்ட் அளிக்கிறோம். நன்றி'' என கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications