விதியை பாருங்க! கழற்றிவிடப்பட்ட சிம்லா முத்துச்சோழன்.. கண்டுகொள்ளப்படாத விஜயதாரணி.. பெரிய பாடம்
சென்னை: சரியாக தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு செல்வது என்பது புத்திசாலித்தனமாக வேண்டுமானால் தோன்றலாம். ஆனால் அப்படி 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சி மாறிய இரண்டு பேரின் அரசியல் எதிர்காலமே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதாரணிக்கு பாஜகவில் எந்த சீட்டும் வழங்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இடைத்தேர்தலிலும் வி.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
ஏன் கட்சி மாறினார்: காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரணி முயன்று உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல் வெளியானது.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியை அவர் கேட்டதாகவும், அங்கே மீண்டும் எம்பி விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வந்தன. அதனால் விஜயதாரணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் குமரி தொகுதியை ஒதுக்க காங்கிரஸ் மறுத்ததாக தகவல்கள் வந்தன.
எதிர்ப்பு: இதையடுத்து விஜயதாரணி பாஜகவில் இணைந்துவிட்டார். இதனால் பாஜகவில் இவருக்கு தென் மண்டலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கருதப்பட்டது. அல்லது விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் இடம் கிடைக்கும் என்பதற்காக ஆசையாக பாஜகவிற்கு சென்றவருக்கு எம்எல்ஏ பதவியும் போய்.. எம்பி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் போய்விட்டது.
சிம்லா முத்துசோழன்: அதேபோல் நெல்லை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சரியாக நேரம் பார்த்து திமுகவில் இருந்து அதிமுக சென்ற சிம்லா முத்துச்சோழனுக்கு கொடுக்கப்பட்ட எம்பி சீட் பறிபோய் உள்ளது. சிம்லா முத்துச்சோழன் திமுகவில் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதிருப்தியால் கடந்த மார்ச் முதல் வாரத்தில் தான் அதிமுகவில் இணைந்தார்.திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். வழக்கறிஞராக உள்ளார்.
ஆசையாக அதிமுகவிற்கு சென்றவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு தற்போது அந்த சீட் பிடுங்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல்; கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்த அளவில், 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications