உதவி கேட்டு லெட்டர் எழுதினேன்! யாருனே தெரியாத எனக்கு கல்யாண செலவு பண்ணார்.. கதறிய விஜயகாந்த் ரசிகர்
சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்திற்குப் பல லட்சம் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அப்படி ரசிகர் ஒருவர் கேப்டன் குறித்துப் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தே வந்தார். மேலும், தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.. இருப்பினும், அவர் சில நாட்களில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
விஜயகாந்த்: அதன் பிறகு தேமுதிக கட்சி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இருப்பினும், மீண்டும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று காலை சிகிச்சை பலனில்லாமல் காலமானார். விஜயகாந்த்தின் இந்த மறைவு பொதுமக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனி ஸ்டைலை வைத்திருந்த விஜயகாந்த், 1980களில் திரை பயணத்தை ஆரம்பித்த அவர், பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் பல அவமானங்களைக் கடந்தாலும் அதையும் தாண்டி அவர் மாபெரும் வெற்றியைப் பெற்றார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி, தொடர்ந்து கொண்டே இருந்தது.
அஞ்சலி: கடந்த இரண்டு நாட்களாக அவருக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடங்கி கடைநிலை தொண்டர்கள் வரை பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் விஜயகாந்த் தங்களுக்குச் செய்த உதவி குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ரசிகர் நெகிழ்ச்சி: இதற்கிடையே ஒன் இந்தியா தமிழுக்குப் பேசிய அவரது கோடிக் கணக்கான ரசிகர்களில் ஒருவர், யாரென்றே தெரியாத தனக்கும் விஜயகாந்த் எப்படி உதவினார் என்பது குறித்த நெகிழ்ச்சி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் ஒன் இந்தியா தமிழ் ஊடகத்திடம் பேசுகையில், "எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. சொந்தக்காரர்கள் அனைவரும் எனது திருமணத்திற்குக் காசு தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்..

அப்போது எனது நண்பர் மூலம் கேப்டன் விஜயகாந்த்திற்கு ரூ.15இல் லெட்டர் ஒன்றை எழுதிப் போட்டேன். திருமணத்திற்கு உதவுமாறு கேப்டன் அலுவலகத்திற்கு லெட்டர் அனுப்பினேன். எனக்கு 7.7.2000 இல் திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு வரை திருமணத்திற்குத் தேவையான பணம் எனக்குக் கிடைக்கவில்லை. ஜூலை 1ஆம் தேதி தான் பணம் கிடைத்தது. அதுவும் கேப்டன் தான் ராவுத்தர் என்பவர் மூலம் எனக்குப் பணத்தைக் கொடுத்தார்.
பணம் கொடுத்து உதவினார்: எனது ரசிகர் ஒருவரது திருமணம் தடைப்பட்டு இருக்கிறது. சொந்தக்காரர்கள் பணம் தரவில்லை. எனவே இதைக் கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி பணம் கொடுத்துள்ளார். நான் அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்றதில்லை. அவரை நேரில் கூட பார்த்ததே இல்லை. ஆனாலும், அவர் எனக்கு உதவினார். அவர் கொடுத்த பணத்தில் தான் எனக்குத் திருமணம் நடந்தது. இப்போது நான் 3 பிள்ளைகளைப் பெற்றுள்ளேன். பேரனையும் நான் பெற்றெடுத்துள்ளேன். இதற்குக் காரணமே கேப்டன் விஜயகாந்த் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications