விஜயகாந்தை பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.. அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்.. பாலா இரங்கல்
சென்னை: விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கேபிஒய் பாலா, "என்றைக்குமே அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேசன்.. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கேப்டன் எங்கேயும் போகலை.. நம்முடன் தான் இருக்கிறார்" என்று கூறினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண்கலங்கியது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல் படுத்தினர்.

தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீர்விட்டு கதறினர். விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் தொண்டர்கள் வெள்ளத்தல் நிரம்பி வழிந்தது.
தொடர்ந்து இன்று காலை விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. இன்று காலை 6.55 மணியளவில் இருந்து விஜயகாந்த் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கேபிஒய் பாலா, விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் கூறிய பாலா, கேப்டன் தான் என்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறினார். நடிகர் பாலா கூறியதாவது:-

மிகப்பெரிய மனிதர். உன்னதமானவர். என் வாழ்நாளில் நான் முதன் முதலாக பார்த்த செலிபிரேட்டி விஜயகாந்த் தான்.. நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது தூரத்தில் இருந்து பார்த்தேன். அதன்பிறகு எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போ தான் என்னால பார்க்க முடிந்தது. அவரை பற்றி பேச எனக்கு தகுதியில்லை.
நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை. விஜயகாந்த் தான் என்னுடன் இன்ஸ்பிரேசன்.. அவர்கிட்டே இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கத்துக்கொண்டு இருக்கிறேன். கற்றுக்கொள்வேன். கேப்டன் எங்கேயும் போகல.. எல்லார் மனதிலேயும் இருக்கிறார். என் மனதிலும் இருக்கிறார்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications