விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை.. நட்புக்கு இலக்கணம்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினி உருக்கம்
சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், "நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறினார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. மியாட் மருத்துவமனையில் உயிரிழ்ந்த விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்ததால் இன்று அதிகாலை சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து சென்னை திரும்பினார். நேராக தீவுத்திடல் சென்ற ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நேற்று வரவேண்டியிருந்தது. ஆனால் இப்போது தான் வந்தேன். ரொம்ம மனசு கஷ்டமாக இருக்கிறது. விஜயகாந்தை பற்றி பேசவேண்டும் என்றால் எவ்வளவோ இருக்கு. நட்புக்கு வந்து இலக்கணம் கேப்டன் விஜயகாந்த் தான். ஒருமுறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுவதும் அதை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு வந்து அடிமையாகிவிடுவார்கள்.
இதனால் தான் அவருக்காக உயிரையே கொடுக்க ரெடியா இருந்தாங்க.. இருக்கிறாங்க.. நண்பர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் ஏன் எங்கள் மீது அவர் கோபப்படுவார். ஆனால் விஜயகாந்த் மீது யாருக்கும் கோபம் இருக்காது. ஏன் என்றால் அவருடைய கோபத்துக்கு பின்னாடி சரியான காரணம் இருக்கும். காலம்தோறும் அவருடன் பழக வேண்டும் என்று மனது சொல்லும். அந்த அளவுக்கு அன்புள்ளம் கொண்டவர். கேப்டன் என்பது விஜயகாந்துக்கு சரியான பெயர்.

நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமச்சந்திராவில் சுயநினைவில்லாமல் இருந்த போது அனைவரும் வந்து பார்த்து தொந்தரவாக இருந்தது. அப்போது விஜயகாந்த் அனைவரையும் ஒழுங்குபடுத்தினார். சிங்கப்பூர்- மலேசியா கலை நிகழ்ச்சிக்காக போகும் போது மலேசியாவில் அனைவரும் பேருந்தில் ஏறிவிட்டனர்.
நான் வர தாமதமாகிவிட்டது. பவுன்சர்களால் ஒன்றும் செய்ய முடியலை. 2 நிமிஷத்தில் அத்தனை பேரையும் விரட்டிவிட்டு என்னை பூ மாதிரி பேருந்தில் ஏற்றி உட்கார வைத்தார். கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவர். கேப்டன் பொருத்தமான பெயர்; நூற்றுக்கணக்கான ரன்களைக் குவித்து விக்கெட் இழந்து இந்த பீல்டை விட்டுப் போய்விட்டார் விஜயகாந்த்.. வாழ்ந்தவர் கோடி- மறைந்தவர் கோடி- மக்கள் மனதில் வாழ்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான் - வாழ்க விஜயகாந்த் நாமம்! இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications