சினிமாவில் நடிக்க தெரிந்த விஜயகாந்த்திற்கு அரசியலில் நடிக்கவே தெரியவில்லை.. தெரிந்திருந்தால்..!
சென்னை: விஜயகாந்த் தான் வாழ்நாள் முழுவதும் இயல்பான வெள்ளந்தியான மனிதராகவே வாழ்ந்தார். அவர் எந்த இடத்திலும் நடிக்கவில்லை.. சினிமாவில் நடிக்க தெரிந்த விஜயகாந்த்திற்கு அரசியலில் நடிக்கவே தெரியவில்லை.. தெரிந்திருந்தால்.. அவரை நிச்சயம் அரசியல் ஜாம்பவனாக உலகம் கொண்டாடியிருக்கும். அவரது அரசியல் பயணம் சரிந்தது எப்படி என்பதை பார்ப்போம்.
நடிகர் விஜயகாந்த் நடிக்கத் தொடங்கிய சில காலத்திலேயே, அவருக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாகச் சரியாகப் பயன்படுத்தியவர் விஜயகாந்த். தனது சொந்தப் பணத்தில் கல்வி உதவிக்கென்று பல லட்சம் பணத்தை ஒதுக்கி செலவு செய்தார். ஏழைகளுக்கு இலவச தையல் மிஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது என்று பல நற்பணிகளை செய்து வந்தார்.

இதன் காரணமாக நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது, தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது மறுக்க முடியாத உண்மை. 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். 2005ம் ஆண்டு குக்கிராமங்களிலும் விஜயகாந்த் சின்னமும், பெயரும் வலுவாக இருந்தது. 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், 8.45 சதவீத வாக்குகளை பெற்று அசத்தினார். விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
2006ம் ஆண்டு திமுக மெஜாரிட்டி இல்லாமல் (காங் ஆதரவுடன்) மைனாரிட்டி ஆட்சி அமைக்க விஜயகாந்த் காரணமாக இருந்தார். அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் விஜயகாந்தின் தேமுதிக பெற்ற வாக்குகளே காரணமாக இருந்தது. சுமார் 100 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக தேமுதிகவின் வாக்குகள் 2006 இல் இருந்தன
அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக கணிசமான வாக்குகளை பெற்றது. அப்போது கோயம்பேடு மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. தன் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுக இப்படி செய்வதாக விஜயகாந்த் நினைத்தார். அத்துடன் கருணாநிதியை அப்போது கடுமையாக விமர்சித்தார்.
அதன்பின்னர் 2009 நாடாளு மன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே தேமுதிக போட்டியிட்டது. அதில் 10.45 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக, அதிமுகவை அதிர வைத்தார் விஜயகாந்த். இதனிடை 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் எடுத்த முடிவு அவரது அரசியல் வாழ்விற்கு சரிவாக அமைந்தது. கட்சியினரின் நெருக்கடி காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் முடிவு செய்தார். இந்த முடிவே திமுக, அதிமுகவிற்கு மாற்றாக வர முடியாமல் போக காரணமாக அமைந்தது. திமுக, அதிமுக இரண்டில் எந்தக் கட்சியோடு கூட்டு சேர்ந்தாலும் தனது தனித்தன்மை போய்விடும் என்பது பின்னாளில் தான் தெரியவந்தது.
2011 தேர்தலின்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக மீது எதிர்ப்பலை இருந்தது. அப்போ, விஜயகாந்த் தனித்து போட்டியிடாமல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது அவரது அரசியல் வாழ்க்கைக்கு சரிவை ஆரம்பித்தது என்றால், அதன்பின்னர் எதார்த்தமான வெள்ளந்தியாக எடுத்த சில முடிவுகள் அவரது அரசியலை பெரும் சரிவுக்கு கொண்டு சென்றது.
சட்டசபையில் கூட்டணியில் இருந்த அதிமுகவுடன் சமரசமாக விரும்பவில்லை. பால் விலைக்கு எதிராக கடுமையான குரல் எழுப்பினார். கூட்டணி கட்சி தானே என சமரசம் செய்ய அவர் விரும்பவில்லை. சாமானிய மக்களின் வலிக்காக குரல் கொடுத்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முன் நாக்கை துரத்தி அவர் பேசியதை பார்த்து சட்டசபையே ஆடிப்போனது. ஜெயலலிதா கடும் கோபம் அடைந்து விஜயகாந்த்துக்கு எதிராக அரசியலை முன்னெடுத்தார். அதன்பின்னர் 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு ஓரளவு வாக்குகளையே பெற்றார். 2011ஐ ஒப்பிடும் போது, எம்பி தேர்தலில் வாக்கு வங்கி கணிசமாக சரிந்தது.
இதனிடையே 2011ல் செய்த தவறை 2016இல் செய்யக்கூடாது என்று நினைத்து விஜயகாந்த் திமுக உடன் கூட்டணி அமைக்க மறுத்தார். ஒருவேளை 2016ல் திமுக கூட்டணி அமைத்திருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கம் என்ற நிலை இருந்தது. அந்த வாய்ப்பை அப்போது விஜயகாந்த் தவறிவிட்டார். 2011ல் அப்போது தனி அணி அமைத்து தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தால், விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி காரணமாக அதிமுக வெற்றியும் பெற்றது என்றும் திமுக தோற்றது என்றும் பேச்சு உண்டு- அதன்பிறகு விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரால் மீண்டு வர முடியவில்லை.. விஜயகாந்த் தான் வாழ்நாள் முழுவதும் இயல்பான வெள்ளந்தியமான மனிதராகவே வாழ்ந்தார். அவர் எந்த இடத்திலும் நடிக்கவில்லை.. சினிமாவில் நடிக்க தெரிந்த விஜயகாந்த்திற்கு அரசியலில் நடிக்கவே தெரியவில்லை.. தெரிந்திருந்தால்.. அவரை நிச்சயம் அரசியல் ஜாம்பவனாக உலகம் கொண்டாடியிருக்கும்.












Click it and Unblock the Notifications