விருதாச்சலம், கோவில்பட்டி.. கடைசி நேரத்தில் "களத்தில்" விஜயகாந்த்! டிடிவி தினகரனுக்கு போன மெசேஜ்
சென்னை: தேர்தல் களத்திற்கு விஜயகாந்த்தே நேரில் வரப்போகிறார் என்ற தகவல் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளையும், உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக. இதையடுத்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இந்த கூட்டணியில் 60 தொகுதிகளில் தேமுதிக களம் இறங்கி உள்ளது.

விருதாச்சலத்தில் பிரேமலதா
விஜயகாந்த் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் தொகுதியில் அவர் மனைவி பிரேமலதா இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் அந்த கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

விஜயகாந்த் பிரச்சாரம்
அதேநேரம், விஜயகாந்த் பிரச்சார களம் வருகிறாராம். இதுதொடர்பாக பேட்டி அளித்த பிரேமலதா, தேர்தல் நெருங்கும்போது, விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று உறுதியாக கூறி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் திறந்த வேனில் நின்றபடி விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.

திறந்த வேன்
இதே பாணியில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதாவது திறந்த வேனில் நின்றபடி விருகம்பாக்கம், விருத்தாச்சலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொகுதிகளில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம்
விஜயகாந்தின் உடல்நிலை அதற்கு மேலும் ஒத்துழைத்தால் டிடிவி தினகரனுக்காக, அவர் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியிலும் பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெசேஜ் டிடிவி தினகரனுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து உற்சாகமடைந்த அவர் ஓடிப்போய் விஜயகாந்த்தை அவர் கட்சி அலுவலகத்தில் பார்த்து பேசினார்.

டிடிவி தினகரன் மூவ்
இது மட்டுமல்ல.. பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்ய ரூ.20 லட்சம் மதிப்புள்ள பிரச்சார வேன் கொடுத்து உதவியுள்ளார் தினகரன். தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்தை நேரில் பார்த்தாலே உற்சாகம் பெற்றுவிடுவார்கள். எனவே, அவர் பிரசார களத்திற்கு வருகை தருவதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications