விஜய்யின் சனிக்கிழமை சென்டிமென்ட்.. சுற்றுப்பயணத்தை ஒரே நாளில் வடிவமைத்தது ஏன்? பின்னணி
சென்னை: தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மட்டும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய்யின் இந்த சனிக்கிழமை சென்டிமென்ட்-க்கு பின் என்ன காரணம் என்ற அக்கட்சி நிர்வாகிகளே கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் களத்திற்கு வர உள்ளார். நீண்ட நாட்களாக வொர்க் ஃபிரம் ஹோம் அரசியலில் இருந்து வந்த விஜய், ஒரு வழியாக களத்திற்கு வருகிறார். இதனால் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தது. செப்டம்பர் 13ஆம் தேதி விஜய் திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.

செப்டம்பர் 13ஆம் தேதி மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய், டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்கிறார். இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மற்ற அனைத்து நாட்களும் சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். விஜய்யின் இந்த முடிவுக்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சனிக்கிழமையை கடந்து மற்ற நாட்களில் விஜய் மக்களை சந்திக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மற்ற கட்சிகள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
விஜய் இதுவரை களத்திற்கே வராத நிலையில், முக்கிய பிரச்சனைகளில் மட்டுமே அறிக்கை மூலமாக தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். இதனால் சுற்றுப்பயணத்தின் போதாவது விஜய் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணிக்கும் போதும், உள்ளூர் பிரச்சனைகளை பேசுவார் என்றும் கருதப்பட்டது.
ஆனால் விஜய் ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு பயணித்து மக்களை சந்திக்க முடிவு எடுத்துள்ளார். அதிலும் சனிக்கிழமை சென்டிமென்ட்டை பின்பற்றுவது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. விஜய்யின் இந்த முடிவுக்கு பின், பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களில் தனது சுற்றுப்பயணத்திற்கு தொண்டர்கள் வருவதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் சனிக்கிழமையன்று பிரச்சாரம் செய்யும் போது, அது அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசியலின் முக்கிய விவாதமாக இருக்கும் என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதுகின்றனர். அதேபோல் விஜய் முதல்முறையாக களத்திற்கு வருவதால், அவர் தயாராகுவதற்கு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அந்தந்த மாவட்டச் செயலாளரை தனக்கு அருகில் நிற்க வைத்துக் கொள்ள விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்களை உருவாக்க முடியும் என்று கணித்துள்ள விஜய், அந்த தொகுதியின் வேட்பாளரையும் முன்னதாக அறிமுகப்படுத்தியதை போல் இருக்கும் என்று கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications