"வில்லேஜ் குக்கிங் தாத்தா உடல்நிலை.." உடனே லைனுக்கு வந்த ராகுல்! கண்ணீர் விட்ட தாத்தா பெரிய தம்பி
சென்னை: வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரிய தம்பி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட நிலையில், அவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
யூடியூப்பில் மிகவும் பிரபலமாக உள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல் தான்.. யூடியூப்பில் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே தனி. தமிழில் சுமார் 2.4 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்ட முக்கிய சேனலாக இது இருக்கிறது.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமைத்து இருப்பார்.. அந்தளவுக்குத் தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட சேனலாக இது இருக்கிறது.
தாத்தா: இந்த சேனலில் முக்கியமானவர் தாத்தா பெரிய தம்பி தான். வயதானாலும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு அவர் செய்யும் சமையலுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே தனி.. இளைஞர்களுக்கு இணையாகத் தாத்தா பெரிய தம்பியும் சமையலில் கலக்குவார். இந்தச் சூழலில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதய நோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது ராகுல் காந்தியிடம் வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பு உதவி கேட்டதாகவும் இருப்பினும் ராகுல் காந்தி உதவ மறுத்துவிட்டதாகவும் பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. இந்தச் செய்தி இணையத்தில் டிரெண்டான நிலையில், வில்லேஜ் குக்கிங் சார்பில் அப்போதே இது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
விளக்கம்: அதாவது, "இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா மீண்டும் சமையலில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு தாத்தா பெரிய தம்பி, வில்லேஜ் குக்கிங் சேனல் வீடியோ ஒன்றில் வந்துள்ளார். அதில் அவர் தெளிவாகவே பல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தி: அந்த வீடியோவில் வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா, "எல்லாருக்கும் வணக்கம். எனக்கு சில காலம் உடம்பு முடியவில்லை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். அப்போது மெசேஜ் மூலமாகவும் கால் செய்தும் நேரில் வந்தும் பலரும் ஆறுதல் சொன்னீர்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு இடையில் தம்பி ராகுல் காந்தியும் போன் செய்து நலம் விசாரித்தார். தாத்தா நல்ல இருக்கீங்களா.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது.. பூரண குணம் அடைந்துவிடுவீர்கள் என்று ஆறுதல் சொன்னார்.. அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அழுதுவிட்டேன்: அதேபோல நான் மருத்துவமனையில் இருந்த போது பலரும் என்னை நினைத்துக் கண்ணீர்விட்டு இருக்கிறீர்கள். அதை நினைத்து நான் மருத்துவமனையிலேயே அழுதுவிட்டேன்.. எனக்கு நான் சாவ போவதை நினைத்து கவலை இல்லை. ஆனால், மக்களை விட்டுவிட்டுப் போவதை நினைத்து அழுதேன். ஆனால், உங்கள் புண்ணியத்தால் நான் நலம் பெற்றுவிட்டேன்" என்றார்.
அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், தாத்தா பெரிய தம்பி இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications