செளந்தர்யா என் தொகுதி..லெட்டர் சேர்வதற்குள்! எங்க ஏரியாவில் கேன்சர் அதிகம்..எம்பி ரவிக்குமார் திடுக்
சென்னை: தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவெய்திய நிலையில், அவரது சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதிக்கும் கடிதம் அனுப்பியதாகவும், அந்த கடிதம் போய் சேர்வதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் இவ்வளவு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பிரபல செய்தி சேனலான நியூஸ் தமிழ் 24x7-ல் செய்தி வாசிப்பாளராக சௌந்தர்யா அமுதமொழி பணியாற்றி வந்தார். செய்தி வாசிப்பின்றி பல்வேறு நிகழ்வுகளையும் தனது கணீர் குரலால் நேரலையில் எடுத்து வைக்கும் அவரது செய்தி வாசிப்புக்கு பலரும் ரசிகர்கள்.

அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் விவாத நிகழ்ச்சிகளிலும் நேரலை நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு அரிதிலும் அரிதான எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் உருவாகி இருந்தது. இதை அடுத்து பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதி உதவி அளித்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தர்யா மறைவெய்திய நிலையில், அவரது சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு கடிதம் அனுப்பியதாகவும், அந்த கடிதம் போய் சேர்வதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்தவர். இந்த வாரம் நான் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்த போது 23.07.2024 அன்று பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு சௌந்தர்யா என்பவருக்கான கடிதத்தை என் உதவியாளர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். நான் அதை பிரிண்ட் அவுட் எடுத்து உடனே கையொப்பமிட்டு விரைவு தபாலில் அவருக்கு அனுப்பி வைத்தேன்.
சௌந்தர்யாவின் குடும்பத்தினரும் நேற்று விழுப்புரத்திலுள்ள எனது அலுவலகத்திலிருந்து அந்தக் கடிதத்தைப் பெற்றுச் சென்றிருந்தனர். ஆனால் அந்தக் கடிதம் அவருக்குச் சென்று சேர்வதற்கு முன்பே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்து விட்டது. அவருக்கு என் அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 225 பேருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நான் உதவி பெற்றுத் தந்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் புற்று நோயாளிகள் தான். அந்த நிதி உதவி மூலம் பெற்ற சிகிச்சையினால் பலர் குணமடைந்திருக்கிறார்கள், உயிர்பிழைத்திருக்கிறார்கள்.
மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 13 பேருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதியில் உதவி கேட்டு கடிதம் தந்துள்ளேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் இவ்வளவு அதிகமாக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவ்வாறு ஆய்வு செய்து அதற்கான மூல காரணம் கண்டறியப்பட்டால் நிச்சயம் பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியலாம். மாண்புமிகு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications