"மணிப்பூர் வன்முறையால் வேளாண்மையும் பாதிப்பு.." தரிசாக மாறும் நிலங்கள்.. வேதனையில் விவசாயிகள்!
இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாகவே கடும் இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வரும் நிலையில், அங்கு விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

மணிப்பூர் வன்முறையில் 150 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இவ்விவகாரத்தால் நாடாளுமன்றமும் முடங்கி வருகிறது.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு முற்றிலும் இயல்பு வாழ்க்கை முடங்கி அப்பாவி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலால் அங்கு விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பருவமழை ஜூன் முதல் வாரத்திலே தொடங்கி விட்டது. ஆனாலும் இப்போது வரை மணிப்பூரின் பல இடங்களில் பருவகால பயிர்கள் எதையும் பயிரிட முடியாத சூழலே நிலவுகிறதாம்.
மணிப்பூரில் தற்போது உள்ள நிலையால் வேளாண்மை பணிகளை செய்ய முடியாமல் இருப்பதாக ஹேமங் சித்லோஹூ என்ற விவசாயி கூறினார். இது குறித்து அந்த விவசாயி கூறுகையில், மணிப்பூரில் கங்கோபோக்பி மாவட்டத்தில் உள்ள மோட்பங் என்ற பகுதியில் எனது வீடும் விவசாய நிலமும் உள்ளது. இது குக்கி இன மக்கள் ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதிக்கும் மெய்தி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ள இம்பால் பள்ளத்தாக்கிற்கும் இடையே உள்ளது.
மணிப்பூரில் தொடர்ந்து நிலவும் கொந்தளிப்பான சூழலால் விவசாய நிலங்களுக்கு பயிரிட கூட செல்வதற்கு நாங்கள் அச்சப்பட்டு போவது இல்லை. ஏனெனில் எப்போது வேண்டும் என்றாலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம்" என்றார். மணிப்பூர் மாநில விவசாயத்துறை வெளியிட்ட தரவுகளும் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதை அப்பட்டமாக காட்டும் வகையில் உள்ளது.
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள 149 கிராமங்களில் இருக்கும் 5,127 ஹெக்டேர்கள் நிலங்கள் தற்சமயம் தரிசு நிலங்களாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலால் அங்கு அனைத்து துறைகளுமே கடுமையான பாதிப்பை ஏற்பட்டு இருக்கும் நிலையில் விவசாயமும் தப்ப வில்லை. இதனால் வாழ்வாதாரம் இழந்து பலரும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஒரு சில பகுதிகளில் விவசாய பணிகள் நடந்தாலும் பிஷ்னுபுர், கங்க்போக்பி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய பணிகள் கடுமையாக முடங்கியுள்ளது. மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களுக்கு பெரும் இழப்பை இது ஏற்படுத்தும் என்று வேளாண் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications