நடுரோட்டில் அடிதடி தகராறு.. கெட்ட வார்த்தைகளை விட்ட விஜே நிக்கி (எ) நிக்கிலேஷ் தலைமறைவு
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் வழிவிடுவதில் தனியார் நிறுவன ஊழியருடன் அடிதடியில் ஈடுபட்டதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் நிக்கி என்கிற நிக்கிலேஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
யூடியூபில் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வந்தவர் நிக்கி என்கிற நிக்கிலேஷ். இவர் சன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவர் சன்மியூசிக், ஆதித்யா உள்ளிட்ட சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்றிரவு சென்னை புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தனியார் அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்டாக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவரும் காரில் வந்து கொண்டிருந்தார். இருவருக்கும் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

மோசமான வார்த்தைகள்
ஒரு கட்டத்தில் இருவரும் மோசமான பொருள்படக் கூடிய வார்த்தைகளை மாறி மாறி பேசிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் நிக்கியின் முகம் மற்றும் புருவத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேப்பேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சண்டை
இருவரும் சண்டை போட்டுக் கொண்டதால் புரசைவாக்கம் பகுதியில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை வைத்து நிக்கி மீதும் ராஜேஷ் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், காயம் ஏற்படுத்துதல், பிறரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தொகுப்பாளர் நிக்கி தலைமறைவாக இருந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சின்னத்திரை
அண்மைக்காலமாக சின்னத்திரை பிரபலங்கள், விஜேக்கள் மீது குற்றச்சாட்டு எழுகின்றன. அந்த வகையில் சின்னத்திரை நடிகை திவ்யா, நடிகர் ஆரவ் மீது பரபரப்பு புகாரை அளித்தார். அதில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆரவ், தற்போது தான் 3 மாத கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் செல்லம்மாள் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

தட்டி கேட்ட திவ்யா
இது குறித்து தான் தட்டி கேட்ட போது என்னுடன் மோதல் போக்கை கொண்டு என்னை கீழ் தள்ளியதால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என தெரிவித்தார். மேலும் தன்னை கட்டாயமாக மதம் மாறுமாறு ஆரவ் மீது திவ்யா புகார் அளித்திருந்த நிலையில் ஆரவ் கைது செய்யப்பட்டார். அது போல் அண்மையில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டார்.

யூடியூப் சேனல்
அவர் யூடியூப் சேனல் நடத்தும் சூர்யாதேவி என்பவருடன் இவருக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வனிதாவின் திருமண விவகாரம் குறித்து சூர்யாதேவியுடன் சேர்ந்து நாஞ்சில் விஜயன் பேசி வந்த நிலையில் திடீரென வனிதாவுக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் பேசியதால் சூர்யாதேவி அதிர்ச்சி அடைந்து இதை நாஞ்சில் விஜயனிடம் தட்டி கேட்டுள்ளார். அதற்கு நாஞ்சில் விஜயன் சூர்யாதேவியை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக சூர்யா தேவி புகாரின் பேரில் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications