குழப்பறீங்களே.. முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குதா?.. நறுக்கென கேட்ட சசிகலா
திமுக அரசுக்கு சசிகலா கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று சசிகலா முக்கிய கோரிக்கையை விடுத்து, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது.. தினம் ஒரு திருப்பம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.. அதிருப்திக்கு ஆளானவர்கள் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர்ந்து வருகின்றனர்...
அதேபோல கட்சி விதிகளை மீறுவோர்கள் நீக்கப்பட்டும் வருகின்றனர். இதனிடையே சசிகலாவின் தலைமையை அதிமுக நிர்வாகிகள் பலர் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.. ஆனால் சசிகலாவோ, அறிக்கைகள் மூலமாகவே மட்டும் தற்போதைக்கு செயல்பட்டு வருகிறார்..

புரியாத புதிர்
அந்த வகையில் தொண்டர்களுக்கு உத்வேகத்தை தருவதற்கு கடிதங்களையும், அரசுக்கு முக்கிய கோரிக்கைளை முன்வைப்பதற்கும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். இப்போதும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப் போவதாக வரும் செய்திகள் உண்மை தானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது... இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை. பின் எதற்காக, இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
அதேபோல், கடந்த வாரத்தில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் படம் வைத்ததாக செய்திகள் வந்தன. பின்னர் மறுநாளே அந்த படம் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இது போன்ற செயல்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகார மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா?
என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்கு தொடர்ந்து எழுவதாக சொல்கிறார்கள்.

மழைநீர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை, பல்வேறு ஆதாரங்களுடன் அன்றே தெரிவித்து இருக்கிறார். அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவடைவார்கள். எனவே இது போன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு தங்கள் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழி வகை செய்தாலே போதும்.

திட்டங்கள்
அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆகையால், தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும்" என்று சசிகலா அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா
நேற்றைய தினம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தமிழ் நாட்டில் தமிழ் திராவிட ஆட்சியில் தை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.. இதனை 1932ம் ஆண்டு தமிழர் அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர்.. இதனை தான் கலைஞர் கொண்டு வந்தார், ஆனால் அதனை ஜெயலலிதா தன் வீம்புகாக மாற்றி தவறு செய்தார்.. இதே தவறை தற்போது உள்ள அதிமுகவினர் செய்தால் தற்போது உள்ள நிலையை கூட அவர்களால் காப்பாற்றி கொள்ள முடியாது" என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications