வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியம்தான்! ஆனால் அதில் அவசரம் ஏன்? கமல்ஹாசன் கேள்வி
சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியம்தான் ஆனால் அதில் அவசரம் ஏன், மக்களாட்சியின் தலைமையே வாக்குரிமைதான் என்று வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமாகா, அமமுக, நாதக, பாமக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படுகிறது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இதற்கான அறிவுரைகளை வழங்கியது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் வரும் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதற்கு திமுக, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, மக்கள் நீத் மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நடத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது அவசியம். ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியில் தேர்தல் கமிஷன் அவசரம் காட்டுவது ஏன்? நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் உண்மையான உள்நோக்கம் என்ன? இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications