யூடர்ன்.. மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோல் வரலாறு.. திருவாவடுதுறை ஆதினம் பேட்டியால் திருப்பம்
மயிலாடுதுறை: இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் கடந்த மே 28ம் தேதி நிறுவப்பட்ட செங்கோல் குறித்த சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. அந்த செங்கோல் மறைந்த முன்னாள் நேருவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆன மவுண்ட்பேட்டன் பிரவுவிடம் வழங்கப்பட்டது பற்றி ஆவணங்கள் எங்களிடம் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் முன்பு, பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு "அதிகாரத்தை மாற்றுவதை" குறிக்கும் வகையில் ஆதினம் தங்க செங்கோலை பரிசளித்ததாக மத்திய அரசு கடந்த மாதம் 26ம் தேதி தெரிவித்தது. மத்திய அரசால் அதுபற்றி ஆவணம் ஒன்றும் பகிரப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட "செங்கோலின் முக்கியத்துவம்" என்று தமிழ் ஆவணம் காட்டப்பட்டது. இந்த ஆவணத்தை தெளிவான ஆதராமாக ஏற்க பலர் மறுத்துவிட்டனர்.

அந்த ஆவணத்தில் தான் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி வழங்கியதாகவும், அந்த செங்கோல் தான் பின்னர் கங்கையில் இருந்து தண்ணீர் தெளித்து சுத்திகரிக்கப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் தெளிவில்லாத இந்த ஆவணத்தை ஏற்க பலரும் மறுத்துவிட்டனர். மேலும் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் தரப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்று காங்கிரஸ் உள்பட எதிரக்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இந்நிலையில் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது தலைவர் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், இந்து ஆங்கில நாளிதழுக்கு செங்கோல் சர்ச்சை குறித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசும் போது, "இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டது பற்றி எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. அதை பற்றி ஏதோ ஒரு சார்ட் பிலிம் இருந்ததாகவே நான் கேள்விப்பட்டேன். மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு அந்த காலத்தில் செங்கோல் கொடுக்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். அப்போது வாழ்ந்த மக்களும் இதையே கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 14, 1947 அன்று நேருவிடம் செங்கோல் கொடுப்பதற்கு முன், மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு செங்கோல் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள் (இந்து நாளிதழ் சார்பில் இந்த கேள்வியை அவரிடம் கேட்டார்கள்), மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு செங்கோலைக் கொடுத்து என்ன பயன்? எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். அன்று மிகவும் முக்கியமானவர் நேரு தான்" என்றார்.
இதனிடையே மத்திய அரசு மே 26 அன்று வெளியிட்ட பதிவு சரியானது தானா என்பது ஆதீனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் இந்து நாளிதழ் கேட்டிருந்தது. அப்போது ஆதினத்தின் சார்பில் பேசிய பிரதிநிதி, இது 1947 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் ஆதீனத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு நினைவுப் பரிசுகளில் வெளியிடப்பட்டது மற்றும் அதன் பதிவுகளில் உள்ளது என்றும் அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய (ஜூன் 8) பேட்டியின் போது, இந்த இரண்டு நினைவுப் பரிசுகளைப் பற்றியும் திருவாவடுதுறை சுவாமிகளிடம் இந்து நாளிதழ் சார்பில் கேட்டனர். அதற்கு அவர், " சுதந்திரத்தின் போது வழங்கப்பட்ட நினைவு பரிசுகளை எங்களால் இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அது எங்கிருக்கிறது என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த வரலாற்றை தவறு என்று யாரும் கூறவில்லை.
2022ம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு பிறகு தான் நாங்கள் செங்கோல் வழங்கும் வரலாற்று நிகழ்வை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினோம். அண்மையில் இதற்காக நங்கள் நினைவுப் பரிசையும் வெளியிட்டோம்.
1947 இல் சுதந்திரம் அடைந்த அந்த நாட்களில் செங்கோல் பற்றி அதிக புகைப்படங்கள் இல்லை. மிக அரிதாகவே சில படங்கள் இருந்தன. இருப்பினும், நாங்கள் செங்கோல் பற்றிய பழைய புகைப்படங்களை தொடர்ந்து தேடி வருகிறோம். டெல்லியில் இது பற்றிய கல்வெட்டு இருப்பதாக சொல்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ ஏதோ இருப்பதாக சொல்கிறார்கள் என்றார்.
செங்கோல் "அதிகார பரிமாற்றத்தின்" குறியீடு என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று என்ற கருத்தை ஒப்புக்கொண்ட திருவாவடுதுறை ஆதினம், " நம் நாடு சுதந்திரம் அடைந்ததை நான் பார்க்கவில்லை. நாங்கள் 1947 இல் செங்கோலைக் கொடுத்தார்கள். அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. செங்கோல் பற்றி வரலாற்றில் தான் பார்க்கிறோம். செங்கோல் பற்றி பாடப்புத்தகங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அது பாடப்புத்தகங்களில் இல்லை . இதுவே குழப்பத்திற்கு முக்கிய காரணம். பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை பலரும் அறிந்திருப்பார்கள்.
நேருவுக்கு செங்கோல் கொடுக்கப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்களும் புகைப்படங்களும் எங்களிடம் இருக்கின்றன. இது சர்ச்சைக்கு உட்பட்டது அல்ல. நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து நாங்கள் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கூறினோம். அண்மையில் ஆளுநர் ரவி வருகை தந்தபோது, செங்கோல் கையளிக்கப்பட்டது குறித்து விசாரித்தார்.
சமீபத்தில் நாங்கள் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மூலம் 'இந்தியாவின் சுதந்திரத்தில் துராசை செங்கோல்' என்ற புத்தகத்தை வெளியிட்டோம். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் தமிழகத்தின் அனைத்து சைவ மடங்களின் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மதத்தினரின் பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்த பின்னர் செங்கோல் நிறுவப்பட்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சையை தந்துள்ளது" இவ்வாறு திருவாடுதுறை ஆதின தலைவர் கூறினார்.












Click it and Unblock the Notifications