ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்த்தால் குற்றம் இல்லை.. ஆனால்.. சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் இல்லை என்றும் மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சட்டப்படி குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், தன் மீது போடப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம், போக்சோ சட்டம் போடப்பட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த இளைஞர், ஆபாச படம் பார்த்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்க்கவில்லை, மற்ற யாருக்கும் இதனை அனுப்பவில்லை என்று கூறினார்.
மேலும், இந்த பழக்கத்தில் இருந்து விடுபட கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளவும் தயார் என்று அந்த இளைஞர் கூறினார். இதனை தொடர்ந்து இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் கிடையாது. ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என்று உத்தரவிட்டார். மேலும் இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு எப்படி 90 கிட்ஸ்கள் மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்களோ.. அதே போல இப்போது 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், இணையதளத்தில் எளிதில் ஆபாச படம் கிடைப்பதால் இன்றைய தலைமுறையினர் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்.
10க்கு 9 டீன் ஏஜ் பருவத்தினர் ஆபாச படங்கள் பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. ஆபாச படங்கள் பார்ப்பதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications