கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பத்தால் நீராதாரம் குறைந்துள்ள நிலையில் மின் வாரிய அணைகளில் இருந்தும் நிலத்தடி நீரை கொண்டும் குடிநீர் தேவையை தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சமாளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் தற்போது அடிக்கும் கோடை வெயிலால் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

சென்னை, ஈரோடு, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இரண்டாவது அதிக வெயில் கொண்ட நகரமாக ஈரோடு அறியப்படுகிறது.
கோவையில் அந்த அளவுக்கு வெக்கை தெரியாது என சொல்லப்பட்டு வரும் நிலையில் அங்கும் தற்போது வெப்பம் கொளுத்தி எடுப்பதாக சொல்கிறார்கள். கோடை வந்தாலே தண்ணீர் பஞ்சம்தான் மக்களின் நினைவுக்கு வரும். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பார்கள்.
ஆனால் தற்போது சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சென்னை மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இதற்காக 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 220 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தினந்தோறும் 5 கோடிக்கு மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள். ஆறுகள், ஏரிகள், அணைகள் மட்டுமல்லாமல் நிலத்தடி நீரையும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம் பயன்படுத்தி வருகிறது.
கோடை வெப்பத்தின் கொடூரத்தால் நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், அணைகள் உள்ளிட்டவைகளில் மேற்பரப்பு நீராதாரம் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் பல மாவட்டங்களில் சரிந்து வருகிறது. இதனால் கோவை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோவையில் ஆழியாறு, பவானி, பரம்பிக்குளம், சிறுவாணி, பில்லூர் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அதன் மூலமும் போதிய குடிநீர் கோவை மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து, அப்பர் பவானி உள்ளிட்ட மின்வாரிய அணைகளில் இருந்து நீர் பெறப்படுகிறது.
அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக பூர்த்தி செய்ய திருச்சி மாவட்டம் மூவரசநல்லூரிலிருந்து கூடுதல் நீர் அனுப்பப்படுகிறது. அது போல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுமாறு குடிநீர் வடிகால் வாரியம் கோரிக்கை விட்டுள்ளது. அதை தமிழக அரசு ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மேட்டூர் அணை நீரால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முயற்சிகள் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆங்காங்கே நீரை பெற்று ஜூன் மாதம் வரை வண்டியை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. எனவே இதை உணர்ந்து மக்களே முன் வந்து தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தால் மட்டுமே பெங்களூர் போல் பஞ்சமின்றி இருக்க முடியும்.












Click it and Unblock the Notifications