கண்ணீரில் வயநாடு..நிலச்சரிவால் பலியான 270 உயிர்கள்! அதிமுக சார்பில் 1 கோடி நிதி.. எடப்பாடி அறிவிப்பு
சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 270ஐ கடந்துள்ளது. இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது கொட்டும் மழையிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்துள்ள நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கேரளா நிலச்சரிவு சம்பவத்திற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவதோடு நிதி உதவியும் அளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதியினை அளித்திருக்கிறார். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை சேகரித்து கேரளாவில் வயநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக அதிமுக சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடுமையான மழைப் பொழிவின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் தற்போதுவரை 246 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதேபோல், பொதுச் சொத்துகளுக்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக வரலாறு காணாத பேரிழப்பை அப்பகுதி மக்கள் சந்தித்திருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடும் மழைப் பொழிவின் காரணமாக பேரிழப்பை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறும்; மேலும் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஏழை, எளிய மக்களுக்கு தாயுள்ளத்தோடு உதவுவதிலும், அண்டை மாநிலங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் நேரங்களில் உதவி செய்வதிலும் முன்னிலை வகித்து வருவதை அனைவரும் நன்கு அறிவர்.
அந்த வகையில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் தெரிவித்துக்கொள்கிறேன்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
