சவால் விட்ட திருமா.. “கடலூரில் கொடி பறக்கும்”.. தேதி குறித்த பாஜக.. அனல் பறக்கும் அரசியல் களம்!
கடலூரில் பாஜக கொடி பறக்கும் எனக் கூறியுள்ளார் பாஜக மாநில செயலாளர்.
சென்னை : சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவுக்கு சவால் விடுத்திருந்த நிலையில், அவர் விடுத்த 2 சவால்களையும் ஏற்பதாகத் தெரிவித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமாவளவன் விடுத்த சவாலை ஏற்று, கடலூர் மாவட்டத்தில் பாஜக கொடியை ஏற்றுவோம் எனக் கூறியிருக்கிறார் வினோஜ் பி.செல்வம்.
எதிர்ப்பு அரசியல் மூலமாகவே கட்சியை வளர்க்க நினைக்கும் பாஜக, திருமாவளவனை டார்கெட் செய்து வடமாவட்டங்களில் கவனம் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

ஹாட்ரிக் அடிக்க நினைக்கும் பாஜக
பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2019ஆம் ஆண்டும் தொடர் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் அடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, தாங்கள் பெரிதாக கால் பதிக்காத தென் மாநிலங்களிலும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர் பாஜகவினர். அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிரான அணியை ஒன்றிணைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இதற்கு வலுவாக அஸ்திவாரம் போடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விசிக - பாஜக மோதல்
கடந்த 2021 முதலே தமிழ்நாடு பாஜக தீவிரமாக களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளையும் பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக கடுமையாகச் சாடி வருகின்றனர். சில நாட்களாக விசிக தலைவர் திருமாவளவன் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இருக்காது என திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிலையில், திருமாவளவன் துணை முதல்வராக வர நினைக்கிறார், திமுக கூட்டணியை விட்டு வெளியேற நினைக்கிறார், அதற்காக பாஜகவை பகடைக்காய் ஆக்குகிறார் என விமர்சித்திருந்தார்.

சவால் விட்ட திருமா
சமீபத்தில் பாஜகவை கண்டித்து விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாட்டில் எங்கும் பாஜக கொடியை ஏற்ற முடியாது. என்னோடு கருத்தியல் விவாதத்திற்கு பாஜகவினர் தயாரா?" என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வினோஜ் பி.செல்வம், கருத்தியல் ரீதியாக விவாதிப்பதற்கு பாஜக என்றும் தயார். எங்கள் கட்சிக் கொடியை கடலூரில் பல்வேறு இடங்களில் ஏற்றுகிறோம் என்றும் திருமாவளவனின் சவாலை ஏற்கிறோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக தயார்
இதுதொடர்பாக வீடியோ பதிவிட்டிருக்கும் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், "சமீபத்தில் ஒரு மேடையில் பேசி இருக்கும் திருமாவளவன், பாஜகவிற்கு இரண்டு சவால்களை முன்வைத்துள்ளார். கருத்தியல் ரீதியாக தன்னுடன் பாஜக விவாதிக்க தயாரா என்று கேட்டிருக்கிறார் திருமாவளவன். ஓராண்டுக்கு முன்பாகவே, விவாதத்திற்கு தயார் என எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தபோது, விவாதிக்க அஞ்சி ஓடியவர்தான் திருமாவளவன். ஜி.எஸ்.டி விவாத விவகாரத்திலேயே திருமாவளவனின் அரசியல் ஞானம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை மக்கள் பார்த்து தெரிந்து கொண்டார்கள். இருந்தாலும், அவரோடு கருத்தியல் விவாதத்திற்கு நாங்கள் தயார்.

எங்க கொடி பறக்கும்
இரண்டாவதாக, தமிழ்நாட்டில் பாஜக கொடிகளை எங்கும் ஏற்ற முடியாது என்று சவால்விட்டிருக்கிறார் திருமாவளவன். இந்தச் சவாலையும் ஏற்கிறோம். 1990களில், தீவிரவாதிகள் அச்சுறுத்தலையும் தாண்டி, காஷ்மீர் மாநிலம் முழுவதும் தேசியக் கொடியை ஏற்றியவர்கள் நாங்கள். காஷ்மீரின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இந்திய தேசிய கொடியைத்தான் காண முடியும். அதேபோன்று, வரும் மார்ச் 6ஆம் தேதி, திங்கட்கிழமை, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக கொடி ஏற்றப்படும். கடலூரில் எங்கள் கொடி பறக்கும். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் நீங்கள் ஈரோடு ஃபார்முலாவை பின்பற்றினாலும் சரி, வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்தாலும் சரி, பணமூட்டைகளை கொட்டினாலும் சரி, இங்கு பாஜகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தாமரை மலர்ந்தே தீரும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications