நாங்கள் கோயில்களை வைத்து கலை வளர்க்கிறோம்.. கலவரத்தை அல்ல.. பட்டாசு கொளுத்திய அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கோயில்கள் அதிகம். காரணம், நாம் கோயில்களை வைத்து கலை வளர்க்கிறோம், கலவரத்தை வளர்க்கவில்லை" என சட்டசபையில் பேசி உள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சட்டசபை கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலுரை ஆற்றி பேசுகையில், "இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் திருக்கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டில் 72 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம், நாம் கோயில்களை வைத்து கலை வளர்க்கின்றோம். கலவரத்தை வளர்க்கவில்லை. நாம் கோவில்களை வைத்து பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம்.
கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம், பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள். இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். உலகிற்கே பொதுமறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்.
மனித நேயம் ஒருபோதும் இந்த மண்ணை விட்டு அகலாது. அறநிலையத்துறையே இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும், சொல்லும் தமிழ்நாட்டில் செல்லாது. நதிகள் முன்னே தான் செல்லும், பின் வந்ததில்லை. அதுபோல் எங்கள் முதல்வர் லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைத்ததில்லை; வைப்பதில்லை" எனப் பேசினார்.
மேலும், "திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 6,004 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறை சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறும் அளவுக்கு இதுவரை 8,962 திருக்கோயில்களுக்கு திருப்பணிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கும் ஆட்சி இந்த திமுக ஆட்சி." எனத் தெரிவித்தார்.
திமுக அரசு இந்து கோவில்களை சீரழழிப்பதாகவும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அறநிலையத்துறை என்ற ஒரு துறையே நிச்சயம் இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைக்கு சட்டமன்றத்தில் இவ்வாறு பேசி இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
மேலும், தமிழ்நாட்டில் கோவில்களை மேம்படுத்தவும், பக்தர்களின் நலனுக்காகவும் 108 புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார் சேகர்பாபு. 177.10 கோடியில் 6 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
1.58 கோடியில் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு 1000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். ரூ.1.05 கோடி அரசு நிதியில் 420 மூத்த குடிமக்கள் இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications