"காதலனுடன் பேசி கொண்டே இருந்தார்! அதற்கு நாங்கள்.." திமுக எம்எல்ஏ மகன் விளக்கம்! பரபர ஆடியோ வெளியீடு
சென்னை: இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக திமுக எம்எல்ஏ கருணாநிதி மருமகள் மீது புகார் கிளம்பியுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக எம்எல்ஏ மகன் ஆன்டோ விளக்கமளித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கருணாநிதி.. அவரது மகன் ஆன்டோ மதிவாணனுக்கு மெர்லினா என்ற பெண்ணுடன் திருமணமாகி,.. அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இவர்கள் இப்போது சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டு வேலைக்காகப் பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடந்தாண்டு வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இதற்கிடையே மெர்லினா தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக அந்த 17 வயது சிறுமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
கொடுமை: இத்தனை மாதம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் விளக்கி, தனக்கு ஏற்பட்ட காயங்களை அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அந்த வீடியோ வெளியான பிறகு பலரும் மெர்லினா செயலை கண்டித்தனர். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாடினர். இதற்கிடையே திமுக எம்எல்ஏ கருணாநிதியும் இதில் விளக்கமளித்திருந்தார். தனது மகன் குடும்பத்துடன் தனியாக வசித்து வருவதாகவும் இது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மார்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தத் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டிற்கு போலீசார் நேரடியாகச் சென்றுள்ளனர்.
விளக்கம்: இருப்பினும், வீடு பூட்டப்பட்டு இருந்ததால் போலீசார் விசாரணை நடத்த முடியாமல் திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், உரிய விளக்கம் தரவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ இந்த விவகாரத்தில் ஆடியோ விளக்கம் அளித்துள்ளார்.
ஆன்டோ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "நான், எனது மனைவி, குழந்தை மட்டுமே வீட்டில் வசித்தோம். அங்கே வீட்டு வேலை செய்ய ரூ.16,000 சம்பளத்தில் இந்த பெண்ணை வேலைக்கு வைத்தோம். ஆனால், அவர் வேலை பார்க்காமல் கிடைக்கும் நேரம் எல்லாம் மொபைலையே பார்த்து வந்தார். இதனால் நாங்கள் அந்த பெண்ணிடம், உன் அம்மா இரவு மட்டுமே மொபைலை உன்னிடம் தரச் சொன்னார். நீ எப்போதும் அதையே பார்க்கிறாய் என்று சொல்லி அந்த மொபைலை வாங்கினோம்.
காதலன்: அதைப் பார்த்த போது தான் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் பேசுவது தெரிய வந்தது. இது குறித்துக் கேட்ட போது தனது காதலனிடம் பேசுவதாக அந்த பெண் தெரிவித்தார். அது மட்டுமின்றி, "நான் பையனைக் காதலிக்கவில்லை. அந்த பையன்தான் என்னைக் காதலிக்கிறான்" என்றும் கூறினார். உடனே இது குறித்து அப்பெண்ணின் அம்மாவுக்கு இது குறித்து தகவல் சொன்னோம். அவரை நேரில் அழைத்துப் பேசினோம்.
அப்போது தான் அந்த பெண் ஏற்கனவே அவருடைய மாமா மகனைக் காதலித்து வந்ததும்,, அதில் பிரச்சினை ஏற்படவே சொந்த ஊரிலிருந்து அந்த பெண்ணை சென்னைக்கு அவரது தாய் அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது. ஆனால், அதன் பிறகும் கூட அவரது படிப்பிற்குத் தேவையான அனைத்து வேலையும் செய்தோம். நாங்களே நேரடியாகச் சென்று சான்றிதழ்களை வாங்கிக் கொடுத்தோம். மேலும், வீட்டில் இருந்தபடி படிக்கவும் வகுப்பில் சேர்த்துள்ளோம்.
சம்பளம்: சம்பளத்தைப் பொறுத்தவரை அவரது தாயார் தான் சம்பளத்தைக் கையில் தர வேண்டாம் என்றார். இதன் காரணமாகவே முழுமையாகச் சம்பளத்தை அவரது அம்மாவிடம் தர வைத்துள்ளோம். மேலும், கடந்த டிச.25ஆம் தேதி தனக்குப் பிறந்த நாள் என்று அந்த பெண் சொன்னார். உடனடியாக புதுத்துணி, நகைகள் வாங்கிக் கொடுத்தோம். கேக் வெட்டி சந்தோஷமாகக் கொண்டாடினோம். இப்படி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.
அன்று தனது காதலனைப் பார்க்க வேண்டும் என்று அந்த பெண் சொன்னார். அதையும் கேட்டு பீச்சுக்கு அழைத்துச் சென்று 20 நிமிடங்கள் பேச வைத்தோம். அப்போது எனது மனைவியும் கூட இருந்துள்ளார். இதற்குமேல் எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்?
அப்பா: மேலும், எனது அப்பா இந்த வீட்டிற்கு எப்போதும் வந்ததே இல்லை. அவர் அரசியலில் இருக்கும் நிலையில், நான் தொழில் செய்து வருகிறேன். இதன் காரணமாகவே நாங்கள் தனியாகத்தான் இருக்கிறோம். எப்போதாவது எங்களைப் பார்க்க இங்கே வருவார். வெளியே எங்காவது பார்த்தால் பேசுவார்" என்று அந்த ஆடியோவில் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications