எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார் - கே வி ஆனந்துக்கு சூர்யா நன்றி அஞ்சலி
எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார் என்று மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு நடிகர் சூர்
சென்னை: முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது என்று கே.வி ஆனந்த் பற்றி நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார் என்று மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு நடிகர் சூர்யா நன்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவு திரைபிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து, நடிகைகள், திரை உலக பிரபலங்கள் பலரும் கே.வி ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கே.வி. ஆனந்த் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர்கள் பாலா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நடிகர் சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கே.வி ஆனந்த் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
|
நீங்கள் இல்லை என்ற உண்மை
நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கே.வி. ஆனந்த் சார்... இது 'பேரிடர் காலம்' என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்ற உண்மை, மனமெங்கும் அதிர்வையும், வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

அற்புத தருணம்
நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில்தான், 'சரவணன் சூர்யாவாக:' மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. 'முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை: சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன்.

நேருக்கு நேர்
'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்தில் அந்த இரண்டு மணிநேரம், ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன். நேருக்கு நேர்' திரைப்படத்துக்காக நீங்கள் என்னை எடுத்த. அந்த 'ரஷ்யன் ஆங்கிள்' புகைப்படம்தான், இயக்குனர் திரு. வசந்த், தயாரிப்பாளர் திரு. மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும், என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தைவிட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும், நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள்தான்.

மறக்க முடியாது
முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்கமுடியாதது. 'வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்' என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன.

நன்றியுடன் நினைக்கிறேன்
இயக்குனராக 'அயன்' திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள், புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி, 'அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக: என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

நன்றி அஞ்சலி
எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண். எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி. நினைவுகளுடன் சூர்யா" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications