மழை.. ஸ்டாலினின் "ஹை-லெவல்" மீட்டிங்.. கடந்த காலம் மாதிரி நடக்க கூடாது.. அதிகாரிகளுக்கு வார்னிங்!
சென்னை: கனமழையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து உள்ளது.

மழை
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்து வந்தது. சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செமீ மழை பெய்துள்ளது. வில்லிவாக்கத்தில்தான் சென்னையில் அதிகமாக மழை பெய்துள்ளது. வில்லிவாக்கத்தில் அதிகமாக 10 செமீ மழை பெய்துள்ளது. அங்கு நேற்று அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. இன்று அதிகாலை வரை வில்லிவாக்கத்தில் மழை பெய்து தற்போது நின்றுள்ளது.

எங்கே அதிகம்
இது போக அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 7.7 செமீ அளவிற்கு மழை பெய்தது. அங்கு நேற்று பிற்பகல் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. நந்தனத்தில் 5.2 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. அதேபோல் பூந்தமல்லியில் 4.5 செமீ அளவிற்கு கனமழை பெய்துள்ளது. சென்னை தவிர்த்து மாவட்ட வாரியாகவும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

காரைக்கால்
காரைக்காலில் 7 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 4.5 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

நிலைமை என்ன
இந்த நிலையில்தான் கனமழையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யலாம். பேரிடர் மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைப்பது, வெள்ளம் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் , அமைச்சர்களுடன் இந்த ஹை லெவல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் பேச்சு
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் ஏற்பட்டது போல நிலைமை ஏற்பட கூடாது. மண்டல அளவில் பணிகளை செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும். மண்டல அளவில் அதிகாரிகளை கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். நிவாரண முகாம்களை கண்காணிக்க வேண்டும். அங்கு மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கொடுக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

மக்கள் கவனம்
மக்களுக்கு குடிநீர் சரியாக கிடைக்க வேண்டும். இதில் சிக்கல் ஏற்படாமல் பார்க்க வேண்டும். சுவர்கள் வலுவின்றி இருந்தால் அதை முன்கூட்டியே இடிக்க வேண்டும். மின்சார இணைப்பை உறுதி செய்ய வேண்டும். மின்சாரம் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications