மழையை விடுங்க.. லைட்டு போட்ட மாதிரி.. அடுத்தடுத்து மெகா மின்னல் கூட்டம்.. சென்னையை தாக்கியது ஏன்?
சென்னை: சென்னையில் விடிய விடிய மழை பெய்தது மட்டுமின்றி மழைக்கு இடையில் கடுமையாக தொடர் மின்னலும் அடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஒருவழியாக வெயில் முடிவிற்கு வந்து கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. சாதாரண மழை என்று சொல்வதை விட தீவிர மழை என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு சென்னையில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து வருகிறது. முக்கியமாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம் போன்ற பகுதிகளில் மழை அடித்து ஊற்றிக்கொண்டு இருக்கிறது.

இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது
அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது போக நேற்று நள்ளிரவிற்கு பின் அதிகாலை வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
இது போக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.

அதிக மழை பெய்த இடங்கள்: தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இன்று மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
நந்தனம் - 11.7 செ.மீ.
தரமணி - 11.7 செ.மீ.
செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ -
மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ.
சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.
மின்னல்: இந்த மழைக்கு இடையே சென்னையில் ஆங்கங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் இன்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய நிலையில் இதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இந்த மின்னல்கள் முகில் - புவி வகை மின்னல்கள் ஆகும். அதாவது மேகத்தில் இருந்து பூமியை நோக்கி மின்னல்கள் அடிக்கும் வகை ஆகும். சென்னைக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி மேகங்கள் வந்துள்ளன.
ஜூன் மாதத்தில்.. தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படி மேகங்கள் நகர்வது அரிதானது. இந்த கரு மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேலே வரும் முன் வலிமை இழக்க வேண்டும். ஆனால் இவை வலிமை இழக்காமல் தொடர்ந்து மின்னூட்டம் பெற்ற முழு வலிமையோடு சென்னைக்கு வருகின்றன.
பொதுவாக மின்னல் என்பது மேகத்திற்கும் - மேகத்திற்கும் இடையில், மேகத்திற்கு உள்ளேயே, மேகத்திற்கும் பூமிக்கும் இடையில், மேகத்திற்கும் காற்றிற்கும் இடையில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் வானத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகே வரும் போது அவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து சக்தியை வெளிப்படுத்தும்.
இவைதான் மின்னல்கள் ஆகும். இந்த மின்னூட்ட வேறுபாடு பூமிக்கும் மேகத்திற்கும் இடையே ஏற்படும் பட்சத்தில் அவை முகில் - புவி மின்னல் எனப்படும். அதாவது மின்னல் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும். இதுதான் சென்னையில் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications