முடிந்ததா.. விடிந்ததா..? முதலாண்டை நிறைவு செய்த ஸ்டாலின் அரசு.. சாதித்தது என்ன?
சென்னை: முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த கால கட்டத்தில் திமுக ஆட்சியின் சாதனைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Recommended Video
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி உறுதிமொழி ஏற்றார். இதையடுத்து நேராக தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் முதலில் ஒரு 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அவற்றில் மிகவும் முக்கியமானது... பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணமாக ரூ 4000, உங்கள் தொகுதியில் முதல்வர் நிகழ்ச்சியில் பெற்ற மனுக்களை கவனிக்க தனித் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணை ஆகிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இலவச பஸ் பயணம் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. இது நாளடைவில் திருநங்கைகளுக்கும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருட்களை இலவசமாக தந்தது இந்த திமுக ஆட்சி. பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு மற்றும் மஞ்சள் துணிப்பை என 21 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பை திமுக அரசு வழங்கியது.
வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குதல், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது, அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தியது.
பெட்ரோல் விலை ரூ 3 குறைத்தது. இல்லம் தேடிக் கல்வி திட்டம் ஆகியனவற்றை செயல்படுத்தியுள்ளோம். 80138 இல்லம் தேடி கல்வி மையங்களை உருவாக்கினோம். இதனால் பல லட்சம் மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். 1 லட்சம் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி இடை நிற்றலில் இருந்து மீட்டு பள்ளிகளில் சேர்த்துள்ளோம். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குக் கீழ் நகைக்கடன் பெற்ற குடும்பங்களின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் . இவை எல்லாவற்றுக்கும் மேல் நீட் தேர்வு ரத்து, 7 தமிழர்களின் விடுதலை உள்ளிட்டவைகளுக்காக ஆளுநருடன் திமுக மல்லுக்கட்டி வருகிறது. ஜல்லிக்கட்டிற்கென தனி மைதானம் அமைக்கப்படும். திமுக தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட 505 இல் 250 க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக திமுக ஆட்சிக்கு வரும் போது கொரோனா 2ஆவது அலை வீரியத்துடன் இருந்தது. அதை கட்டுப்படுத்திய பெருமை இந்த ஆட்சிக்கு இருப்பதாகவே மக்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் 3ஆவது அலை நம்மை அண்ட விடாமல் பாதுகாத்ததாகவும் மக்கள் பூரிப்படைகிறார்கள். ஓராண்டு முடித்துவிட்டு ஈராண்டு பயணத்தில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications
