‛வாவ்’.. இது வெளிநாடு இல்லை.. நம்ம சென்னை தான்! புதிய விமான முனையத்தின் ஸ்பெஷல் இதுதான்.. பிரமிப்பு
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன முனையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2,467 கோடி செலவில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டர் பரப்பில் இந்த முனையம் உலக தரத்தில் பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் விமான நிலையத்தின் பிரமாண்ட தோற்றம் மற்றும் அதில் உள்ள நிரம்பி வழியும் வசதிகள் பற்றிய சூப்பரான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் போக்குவரத்து தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிய விமான நிலையங்கள் அமைத்தது, ஏற்கனவே இருக்கும் விமான நிலையங்களை பல ஆயிரம் கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

அதன்படி சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய ஒருங்கிணைந்த நவீன முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ல் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.
திறந்து வைக்கும் பிரதமர் மோடி: மொத்தம் ரூ.2,467 கோடியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த முனையத்தை தான் இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் உள்ளது போல் மிகவும் பிரமாண்டமாக ஜொலிஜொலிக்கும் வகையில் இந்த முனையம் காட்சியளிக்கிறது.

சிறப்புகள் என்னென்ன: இதன் தொடர்ச்சியாக தற்போது விமான முனையத்தில் உள்ள சிறப்புகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை விமான நிலைய புதிய முனையம் தமிழ் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முனையத்தின் மேற்கூரை சேலை மடிப்பை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடம் கோல்டன் நிறத்தில் ஜொலிக்கின்றன. தூண்கள் கோல்டன் நிறத்தில் துருப்பிடிக்காத ஷாம்பெயின் பட்டைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தங்க நிறத்திலான பூச்சு விமான நிலையத்தை பார்க்கும் பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
கோவில்களை போல்: மேலும் விமான நிலையத்தின் சுவர்களில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கோவில்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளின் வடிவங்களும் சிற்பங்களாக உள்ளன. மேலும் விமான முனையத்துக்குள் நுழையும் பகுதிகள் என்பது கோவில்களின் நுழைவு வாயில்களை போன்று உருவாக்கப்பட்டுள்ளன.
நவீன வசதிகள்:மேலும் விமான நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வேகமாக செல்லவும், அவர்களின் உடைமைகளை சோதனை செய்யவும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி முனையத்தில் 10 பேக்கேஜ் கன்வேயர் பெல்ட், 38 லிப்ட்கள், 46 நகரும் படிக்கட்டுகள், 12 வாக்கலேட்டர்கள் 100க்கும் மேற்பட்ட செக்-இன் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கார் நிறுத்தம்: விமான பயணிகள் தங்களின் கார்களை நிறுத்தும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 1.7 கோடி பேர் வந்து செல்லும் நிலையில் தற்போதைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள்: முன்னதாக இந்த புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளையும் கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும் கூட புதிய விமான முனையம் இன்று தான் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து அந்த முனையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications