ஆளுநர்களாக மாஸ் காட்டும் தமிழர்கள்.. எந்தெந்த மாநிலங்களில் யார் இருக்கிறார்கள் தெரியுமா! முழு தகவல்
தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பலரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: இப்போது மூன்று மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் ஆளுநர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இப்போது 13 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், சத்தீஸ்கர், மேகாலயா மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்த நிலையில், அங்கும் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாற்றம்
இதில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, லடாக் ஆளுநர் ராதாகிருஷ்ணன் மாத்தூரின் ராஜினாமாக்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திற்கும் ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு புதிய ஆளுநராக அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.. மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ராஜினாமா செய்த நிலையில், அங்கு ரமேஷ் பைஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4 மாநிலங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இல கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், இப்போது அவர் நாகாலாந்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல ஜார்க்ண்ட் மாநிலத்திற்கு ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இப்போது மூன்று மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் ஆளுநர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

தமிழிசை
தமிழக மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த கடந்த செப். 2019இல் தெலங்கானா ஆளுநராக இருந்த ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மனுக்கு பதிலாக மாநிலத்தின் இரண்டாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2021இல் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த போது, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. இப்போது இரு மாநிலங்களிலும் ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார்.

இல கணேசன்
அதேபோல தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல கணேசன், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அவர் மணிப்பூரில் இருந்து நாகாலாந்து மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் ஆளுநராகப் பொறுப்பேற்கும் முன்பு, கடந்த 2016இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்கள்
இப்போது இந்தப் பட்டியலில் சிபி ராதாகிருஷ்ணனும் சேர்ந்துள்ளார்.. அவரை இப்போது ஜார்க்ண்ட் மாநில ஆளுநராகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதன் மூலம் இப்போது மூன்று மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தின் ஆளுநர்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இப்போது மட்டுமின்றி கடந்த காலங்களிலும் பல தருணங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பல மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் 1990 முதல் 1993 வரை மகாராஷ்டிரா ஆளுநராக இருந்துள்ளார்.

ஆளுநர்கள்
அதேபோல காங்கிரஸில் முதலில் பா.ராமச்சந்திரன் 1982 முதல் 1988 வரை கேரளா ஆளுநராக இருந்துள்ளார். பி.சுப்பராயன், ஜோதி வெங்கடாசலம், ஈ.எஸ்.எல்.நரசிம்மன், ஜி.ராமானுஜம், பி.எஸ்.குமாரசாமி ராஜா என்று பலரும் காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 1997 முதல் 2003 வரை ஆந்திர கவர்னராக இருந்தார். ஒடிசா மற்றும் தமிழ்நாட்டிற்கும் சில மாதங்கள் கூடுதல் ஆளுநராகவும் இருந்தார். அதேபோல சண்முகநாதன் 2015 முதல் 2017 வரை மேகாலயா ஆளுநராக இருந்தார்.












Click it and Unblock the Notifications