நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு..தேர்வர்கள் கட்டாயம் இதை மறக்காதீங்க! சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் தேவர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது.
அவற்றில் சுமார் 6244 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வானது நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. நாளை காலை ஒன்பதரை மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட இருக்கிறது.
எழுத்து தேர்வை எழுதுவதற்கு தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்வின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்பட்ட பின்னர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும். 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளேயும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேறி செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் (ஹால் டிக்கெட்), தங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN CARD) வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வரவேண்டும். தேர்வர்கள் ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் தேர்வு தொடங்குவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்தபின் ஒரு கையொப்பத்தினையும், தேர்வு முடிவடைந்தபின் மற்றொரு கையொப்பத்தினையும் இடவேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிடப்படவில்லையெனில், தன்னுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர், முகவரி, பதிவு எண்ணை குறிப்பிட்டு, தலைமைக் கண்காணிப்பாளரிடம் சரிபார்க்க வேண்டும். ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் மற்றும் வினாத்தொகுப்பு ஆகியவற்றை சரிபார்த்து, விண்ணப்பதாரர் வருகைத்தாளில் தனது பெயர், பதிவெண் உள்ளதை உறுதி செய்து, அதில் தன்னுடைய வினாத்தொகுப்பின் எண்ணையும் குறிப்பிட்டு, கையொப்பமிடவேண்டும்.
தொலைபேசி, கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், மின்னணு சாராத பொருள்களான புத்தகங்கள், குறிப்புகள், கைப்பைகள் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது. ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வுக் கூடத்திற்குள்ளோ, வெளியிலோ விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எவ்வித முறைகேட்டிலும் ஈடுபட்டாலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications