"பணம் வராது.. 30% போய்டும்!" வெள்ளி வாங்குவதில் இருக்கும் பிரச்சனை! ஆபத்தை விளக்கிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இப்போது மிடில் கிளாஸ் மக்கள் கூட தங்கத்தை வாங்கும் முன்பு பல முறை யோசிக்க வேண்டிய சூழலே இருக்கிறது. இதனால் அடுத்து வெள்ளியை வாங்கி வைக்கலாமா என மக்கள் பலரும் யோசிக்கிறார்கள். ஆனால், தங்கமும் வெள்ளியும் ஒன்றில்லை என்கிறார் ஆனந்த் சீனிவாசன். மேலும், வெள்ளியை வாங்கும்போது அதில் இருக்கும் பிரச்சனைகளையும் அவர் விளக்குகிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளில் எங்கேயோ உச்சத்திற்குப் போய்விட்டது. போர், புவிசார் அரசியல், பொருளாதாரம் எனப் பல காரணங்களை இதற்கு நாம் சொல்லலாம். இதனால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டி எங்கேயோ போய்விட்டது.

தங்கம் vs வெள்ளி
தங்கம் இந்தளவுக்குப் போய்விட்ட நிலையில், மிடில் கிளாஸ் மக்களால் அதை வாங்க முடிவதில்லை. இதனால் அவர்கள் கவனம் வெள்ளி பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளியும் கூட தாறுமாறாக உயர்ந்து வந்தாலும் கூட அது ஒப்பீட்டளவில் சற்று குறைவாகவே இருக்கிறது. இதனால் வெள்ளியை வாங்கி வைக்கலாமா என்றும் கூட பலரும் யோசித்து வருகிறார்கள். ஆனால், தங்கத்தை வாங்குவதும் வெள்ளியை வாங்குவதும் ஒன்றில்லை என்கிறார் ஆனந்த் சீனிவாசன். மேலும், இதில் இருக்கும் சிக்கல்களையும் அவர் விளக்குகிறார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ஏறிவிட்டது.. இதனால் மக்கள் பலரும் என்னிடம் வெள்ளியை வாங்கலாமா.. வெள்ளி விலை ஏறுமா எனக் கேட்கிறார்கள்.. விலைவாசி ஏறுவதால் வெள்ளியும் நிச்சயம் ஏறும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், நம்மால் தங்கத்திற்கு இணையாக வெள்ளியைச் சொல்ல முடியாது. ஏனென்றால் வெள்ளி என்பது ஒரு ரிசர்வ் கரன்சி கிடையாது" என்றார்.
அதாவது ரிசர்வ் கரன்சி என்பது சர்வதேச நாடுகள் பொருளாதார பாதுகாப்பிற்காக வாங்கி வைக்கும் ஒரு விஷயமாகும். பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை வாங்கி வைத்திருக்கும். சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் டாலருக்கு பதிலாக இப்போது பெரும்பாலான நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. அதுபோல வெள்ளியை வாங்கினால் மட்டுமே அதை நாமும் கருத்தில் கொள்ளலாம் என்கிறார்.
வெள்ளி வாங்கலாமா?
அவர் மேலும், கூறுகையில், "ஒரு காலத்தில் வெள்ளி ரிசர்வ் கரன்சியாக இருந்தது. இந்தியாவில் எல்லாம் வெள்ளி தான் கரன்சியாக இருந்தது. ஆனால், வெள்ளி விலை தாறுமாறாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. இதனால் அதை ஒதுக்கி வைத்துவிட்டனர். எப்போது சர்வதேச நாடுகள் வெள்ளியை வாங்குகிறார்களோ.. அப்போதுதான் நாம் அதைக் கவனிக்க வேண்டும்.
இப்போது தங்கம் விலை ஏறிக் கொண்டே போகிறது. மக்களால் வாங்க முடியாது. இதனால் மக்கள் கோபம் கொண்டு கத்த ஆரம்பிப்பார்கள். நிச்சயம் மக்களிடையே இதனால் ஒரு வெறுப்பு வரும்.. பணக்காரர்கள் மட்டும் தங்கத்தை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்னால் அதை வாங்க முடியவில்லை என நினைப்பார்கள்.
பணம் வராது
மறுபுறம் வெள்ளியைப் பொருத்தவரை வரலாறு ரீதியாக வெள்ளி இரண்டு முறை உச்சத்தில் இருந்து மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், வெள்ளியை வைத்து பணம் வாங்க முடியாது. அதைச் சேமித்து வைப்பதும் கடினம். வெள்ளியில் நமக்குப் பணம் வராது. அதாவது நமக்கு இழப்புகள் அதிகம் என்கிறேன். தங்கத்தை விட வெள்ளியில் மேக்கிங் சார்ஜ் அதிகம். மேலும், வங்கியிலும் வெள்ளியை வைத்து பணம் வாங்க முடியாது.
நீங்கள் எப்போது விற்றாலும் அன்றைய மார்கெட் ரேட்டில் இருந்து குறைவான ரேட்டிற்கு தான் வாங்குவார்கள். அதாவது நீங்கள் வாங்கும் ரேட்டில் இருந்து வெள்ளியின் மதிப்பு 20% குறைவு. ஒட்டுமொத்தமாக அன்றைய மார்கெட் ரேட்டில் இருந்து 20-30% வரை குறைவாகவே உங்களிடம் இருக்கும் வெள்ளியை விற்க முடியும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications