குமரியில் முந்திரி கொத்து.. திருச்சியில் பொரிவிளங்காய்.. மாவட்டந்தோறும் மாறும் தீபாவளி MUST பலகாரம்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு நகரிலும் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பொருள்களை பாரம்பரியமாக செய்வதுண்டு.
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளை தாண்டி பலகாரங்கள்தான் நினைவுக்கு வரும். என்னதான் முறுக்கு, அதிரசம், சுய்யன், சுசியம், லட்டு, பாதுஷா, மிக்ஸர் என கடைகளில் விற்பனை செய்தாலும் நம் வீட்டில் அரிசியை காய வைத்து இடித்து செய்யும் போது அதில் சுவையும் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உணவு பொருள் தீபாவளி அன்று செய்யப்படும். இது காலம் காலமாக செய்து வருவதால் அந்த ஊரின் பாரம்பரியம், கலாச்சாரம், பழக்க வழக்கங்களை வளரும் குழந்தைகள் கற்றுக் கொள்வர்.
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பலகாரங்களை செய்து வருகிறார்கள். மாவு அரைக்கும் மிஷின்களில் கூட்டம் நிரம்பி வழியும். பாட்டி செய்யும் கை முறுக்கையும் தேன் குழலையும் மறக்க முடியுமா? பாட்டி அளவுகளை சொல்ல அம்மா, சித்தி, பெரியம்மாக்களுடன் சேர்ந்து சிறுசிறு உதவிகளை செய்ததையும் நாம் மறக்கவே முடியாது.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் வாசனை சுண்டி இழுக்கும். கை, கால், முகம் கழுவிக் கொண்டு வந்ததும், அம்மா இரண்டு முறுக்குகளை கொடுப்பார். நறுக்கென கடித்து சாப்பிட்டுவிட்டு விளையாட செல்வோம். பொதுவாக தீபாவளி அன்று அதிரசம், முறுக்கு, சோமாசி, லட்டு, தேன்குழல், கை முறுக்கு, மனோகரம், மைசூர்பாக்கு, பாதுஷா போன்ற உணவுகள் செய்யப்படும்.
அது மட்டுமின்றி அந்தந்த மாவட்டத்திற்கென ஒவ்வொரு பலகாரங்கள் தீபாவளி அன்று கண்டிப்பாக செய்துவிடுவார்கள். அந்த வகையில் ராமேஸ்வரத்தில் கீழக்கரையில் துதல் எனும் அல்வா மிகவும் பிரபலம். இது கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி உடலுக்கு நன்மை கொடுக்கும் என்பதால் அன்றைய தினம் அனைவர் வீடுகளிலும் இந்த துதல் இருக்கும்.

அது போல் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் முந்திரி கொத்து என்ற ஒரு இனிப்பு பலகாரத்தை தீபாவளி அன்று நிச்சயம் செய்வர். பாசிப்பயறு, வெல்லம், அரிசிமாவு, தேங்காய் துருவல், மைதா மாவு, ஏலக்காய் தூள், நெய், உப்பு உள்ளிட்டவை சேர்த்து இந்த பலகாரம் செய்யப்படுகிறது.
விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுசியம் என்ற ஒரு ஸ்னாக்ஸ் செய்வது வழக்கம். இதை சுய்யம் என்றும் சுழியம் என்றும் அழைப்பதுண்டு. இந்த பலகாரமும் வெல்லத்தில் செய்யக் கூடியது. கிட்டதட்ட முந்திரி கொத்து போல்தான். அது போல் காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மனக்கோலம், அதிரசம், முறுக்கு, மகிழம்பூ முறுக்கு, பாசி பருப்பு நெய் உருண்டை உள்ளிட்டவை செய்வார்கள்.
செட்டிநாட்டு பாரம்பரிய பலகாரத்தில் வடை கண்டிப்பாக இடம்பெறும். அதிரசம், முறுக்கு, பாசி பருப்பு உருண்டை எல்லாம் ஓகே. அதென்ன மனக்கோலம் என்கிறீர்களா? பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, பொட்டுக் கடலை, தேங்காய், வெல்லம், சர்க்கரை ஆகியவற்றால் செய்யப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறிய காராசேவ் போலவே இருக்கும்.

கோவையில் அரிசி பருப்பு சாதம், தேங்காய் பால் திரட்டு ஆகியவை தீபாவளிக்கு மிக முக்கியமான டிஷ்ஷாக இருக்கின்றன. கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நெல்லையிலும் தேங்காய் பால் திரட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சியில் பொறிவிளங்கா உருண்டை, பாதாம் அல்வா, அச்சு முறுக்கு உள்ளிட்டவை செய்வதுண்டு. அது போல் தீபாவளி லேகியம் முக்கிய பலகாரமாக இருக்கும்.
திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் முறுக்கு, லட்டு, அதிரசத்துடன் தீபாவளி லேகியம் கண்டிப்பாக செய்வார்கள். தீபாவளிக்கு நிறைய பலகாரங்களை சாப்பிட்டால் அது ஜீரணமாக இந்த தீபாவளி லேகியம் சாப்பிடுவதுண்டு. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் முறுக்கு, பாதுஷா, லட்டு உள்ளிட்டவையுடன் அதிரசம் கட்டாயம் செய்வார்கள். பெரும்பாலானோருக்கு கேதார கவுரி நோன்பு இருக்கும். இந்த நோன்புக்கு அதிரசத்தை படைப்பர்.
அடுத்ததாக நம் தலைநகர் சென்னையை எடுத்துக் கொண்டால் இங்கு பொதுவான பலகாரங்களுடன் மிக்ஸர் செய்வார்கள். அத்துடன் குலோப்ஜாமூனும் இடம் பெற்றிருக்கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வாழ வந்தவர்களும் அவர்களுடைய பாரம்பரிய பலகாரத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். உங்க ஏரியாவில் எது பேமஸ். கமெண்ட்டில் சொல்லுங்க பார்ப்போம்.












Click it and Unblock the Notifications