Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவேசமான முதல்வர்.. ஆக்ரோஷமான கட்சிகள்.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், அண்ணா உள்ளிட்ட பல வார்த்தைகள், முக்கிய பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் முன்பாகவே அவருக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரை அவை குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றினார்.

இதனால் ஆளுநர் ரவி சட்டசபையிலிருந்து திடீரென கிளம்பி பாதியிலேயே வெளியேறினார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு அரசு தயாரித்து தானும் இசைவளித்த உரையை முறையாக வாசிக்காத ஆளுநரின் மரபு மீறலுக்கு எதிராக, அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டுமென,முதலமைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.சட்டமன்ற மரபை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என்று தனது பதிவில் போட்டுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை "தமிழக வரலாற்றில் இப்படிப்பட்ட மோசமான ஆளுநரைப் பார்த்ததில்லை எனச் சொல்லும்படியாக அவரது நடத்தை இருந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆளுநர் அதனைச் சிதைக்கிறார். இதுதான் மிகப் பெரிய வேடிக்கையும் வருத்தமும். ஆக தமிழ்நாடு என்பது பெருமைக்குரியது. தமிழகத்தின் கலாச்சாரத்தின் மீது கையை வைக்கிறார். பண்பாட்டின் மீது கைவைக்கிறார். தமிழ்நாட்டின் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார். ஆளுநருக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்" என்று கூறுகிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு, "சட்ட விதிகளுக்கு மாறாக, அரசியல் விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் இன்றைக்குத் தனது உரையினை வாசித்திருக்கிறார். ஆகவேதான் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆளுநர் தனது உரையில் தவிர்த்து இருக்கக் கூடிய விஷயங்கள் என்னவென்று பார்த்தால், அரசின் கொள்கைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விஷயங்களாக அவை உள்ளன. சமூகநீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மதநல்லிணக்கம் ஆகிய இவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற வார்த்தைகளை ஆளுநர் இன்றைய உரையில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார்.

முதலமைச்சர் பேசுகின்ற போதே, தேசிய கீதம் ஒலிபரப்பு செய்வதற்கு முன்பாகவே ஆளுநர் வெளிநடப்புசெய்துள்ளார். இந்தச் செயல் தேசிய கீதத்திற்கும் நம் நாட்டிற்கும் ஏற்படுத்தியுள்ள இழுக்காக நாங்கள் கருதுகிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி

சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி

"முதலில் தமிழில் தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர். அதைப் பார்ப்பதற்கே சந்தோஷமாகவே இருந்தது. தமிழ்நாடு என்ற சொல்லை அவர் தமிழகம் என்று சொல்லி இருக்கின்ற கருத்து தவறாகவே நினைக்கிறேன்.
நம்முடைய கல்வெட்டுகளில் தமிழ்நாடு என்ற வார்த்தை இருந்துள்ளது. இந்த வார்த்தைகளை வைத்து ஒரு அரசியல் செய்ய வேண்டாம் என்பதே எனது கருத்து. அதை யார் தொடங்கினாலும் தவறுதான். ஆளுநரின் அந்தக் கருத்தைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அவர் எந்தக் கருத்தின் அடிப்படையில் தெரிவித்தார் என விளக்கம் கேட்டே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன" என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி கூறினார்.

வேதனையில் சபாநாயகர் அப்பாவு:

வேதனையில் சபாநாயகர் அப்பாவு:

சபாநாயகர் அப்பாவு, "ஆங்கிலத்தில் ஆளுநருக்கான உரை அவருக்கு அனுப்பப்பட்டு, அதை ஏற்றுக் கொண்டு கடந்த 5 ஆம் தேதி அனுப்பினார்கள். ஆனால் இன்றைக்கு வாசிக்கும் போது பல பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, புதியதாக சில பகுதிகளைச் சேர்த்து வாசித்துள்ளார். அது தவறு. ஆளுநர் உரை எழுதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதில் என்ன வாசகங்கள் உள்ளனவோ அதை மட்டுமே பத்திரிகைகள் பிரசுரிக்க வேண்டும் என்று கண்ணியத்துடன் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதைப் பேரவையும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்றார். அவரிடம் ஆளுநர் தேசிய கீதம் ஒலிபரப்பு செய்வதற்கு முன்பே வெளியேறியதைக் குறித்துக் கேட்டபோது," நியாயமா? அல்லது நியாயமா இல்லையா? என்பதை நீங்களே சொல்லுங்கள். அவைக்கு ஆளுநர் வந்தார் உரை முடிந்து தேசிய கீதம் ஒலிக்கப்படும் வரை இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்துள்ள மரபும் அதுதான். ஆளுநருக்கு எதில் உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 175 மற்றும் 176இல் தான். மாநில சட்டமன்றங்களில் ஆளுநர் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அந்த உரிமையை வழங்கியுள்ளது.
ஆனால் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை? திராவிட மாடல் என்ற சொல்லை ஆளுநரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தச் செயல் உண்மையிலேயே எனக்கு வேதனையாக உள்ளது. நமது மாநிலத்தில் உள்ள தலைமை அவர்தான். அவர் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் இதற்கு முன்பே நடந்துள்ளார்கள் . அவரை விமர்சிப்பதற்காகச் சொல்லவில்லை. ஒரு மாண்புடன்தான் இதைச் சுட்டிக்காட்டுகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் 150விதியின் படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்.
ஆக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பது அவரது முழுக் கடமை. மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் மதச்சார்புள்ள நாடு என்று பொதுவெளியில் பேசுகிறார். அது எவ்வளவு பெரிய தவறு? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என்றுதான் உள்ளது. இவர் தமிழகம் என்கிறார். இதை அவர் தவிர்க்கலாம்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தினமும் பத்திரிகைகளில் செய்தி வருவதற்காகச் செய்கிறார்களா? தெரியவில்லை" என்கிறார். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கிக் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநர் நோக்கம்' என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆகவே வருகின்ற 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக

பாமகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி,"பட்ஜெட் விளக்கத்திற்கு முன்னால் வரக்கூடியது இந்த ஆளுநர் உரை. யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்பதைப் போன்றது. ஆளுநர் உரையில் மக்கள் அதிகமாக எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. ஆன்லைன் ரம்மியால் தற்கொகைகள் அதிகமாகிக் கொண்டே உள்ளன. 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இது வெளியில் தெரியும் தகவல். ஆனால் இன்னும் அதிகமாக வெளியில் தெரியாத மரணங்கள் உள்ளன. ஆன்லைன் ரம்மிக்கு எதிராகச் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகிறது. அதைக் கண்டித்தே நாங்கள் ஆளுநருக்கு எதிராக வெளிநடப்பு செய்துள்ளோம்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+