ரேஷனில் மீண்டும் மாற்றம்.. என்னாது, 5 கிலோவா? புதுசா முளைத்த மேட்டர்.. அதிரும் குடும்ப அட்டைதாரர்கள்
சென்னை: ரேஷன் கடைகளிலிருந்து ஒருசில புகார்கள் வெடிக்க துவங்கி உள்ளன.. ரேஷன் ஊழியர்களே இந்த புகார்களை தெரிவித்து வருவதாக சொல்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம், அட்டைதாரர்கள் அனைவருக்குமே குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள்.

அதிரடிகள்: இதைத்தவிர, பொங்கல் தொகுப்பு பரிசு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன..
அதேபோல, ரேஷன்தாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் கடுமையை காட்டக்கூடாது என்றும் ரேஷன் ஊழியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, எந்த காரணம் கொண்டும் பொருட்கள் ரேஷன் கடைகளில் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பொருட்கள்: காரணம், சில ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை வாங்கியதுபோல பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்றுவிடுகிறார்களாம். அதனால்தான், பிராக்சி முறையை பயன்படுத்தக் கூடாது என்றும் விரல்ரேகை சரியாக பதிவாகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு அதிரடிகளை உணவுத்துறை பிறப்பித்துவந்தாலும், இன்னமும் ஒருசில புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது... அதாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து, ரேஷன் பொருட்கள், கடைகளுக்கு எடை குறைவாக அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன..
புகார்கள்: இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் தீர்வு காணாமல் இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். ஒருகட்டத்தில் நொந்துபோய், சமூக வலைதளங்களில் இந்த புகாரை பதிவிடவும் துவங்கி விட்டார்களாம்.
இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் சொல்லும்போது, அரிசி, 50 கிலோ மூட்டையில் அனுப்பப்படுகிறது.. ஒரு கடைக்கு மாதம், 400, 500 மூட்டைகளில் அரிசி வருகிறது. இதில், பாதிக்கும் மேற்பட்ட மூட்டைகளில் ஒரு மூட்டைக்கு, 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளது.. பருப்பு, கோதுமை மூட்டைகளும் எடை குறைவாகவே அனுப்பப்படுகின்றன. எடை குறைவாக வரும் பொருட்களை ஈடுசெய்யவே, சிலர் தவறு செய்யும் நிலைமை ஏற்படுகிறது..
போட்டோக்கள்: இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எடை குறைவாக அனுப்பப்படும் மூட்டைகளை போட்டோக்களாக எடுத்து, சோஷியல் மீடியாவில் புகார்களை பதிவிட்டு வருகிறோம். இதை பார்த்தாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications