"சொத்து வரி செலுத்தவில்லை.." அதிரடி பாதையில் சென்னை மாநகராட்சி! மிரண்ட பெரு நிறுவனங்கள்! முழு லிஸ்ட்
சென்னை: சென்னை மாநகராட்சி முதல்முறையாக 25 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி இப்போது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பருவமழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட அதன் நடவடிக்கைகளைப் பலரும் பாராட்டி இருந்தனர்.
இது தவிரச் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்கு மக்களிடையே பெரியளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - டிச.15க்கு மேல் 2% வட்டி

சென்னை மாநகராட்சி
இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அதேநேரம், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வரிகளை முறையாகச் செலுத்தாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கைகளிலும் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. பெருந்தொகையைக் கட்டாமல் வரிப் பாக்கி வைத்துள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சொத்து வரி
அதன் ஒரு பகுதியாகச் சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலைப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் 25 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 39 பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தனி நபர்களின் பெயர்களும், நிறுவனங்களின் பெயர்களும் கூட இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வரி செலுத்தாதவர்களின் பெயரைச் சென்னை மாநகராட்சி இப்படி வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

24 கோடி பாக்கி
இந்த 39 பேர்/ நிறுவனங்கள் மட்டும் சென்னை மாநகராட்சிக்கு 24.17 கோடி ரூபாய் செத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதிகபட்சமாக மார்டெக் பெரிஃபெரல்ஸ் (Martech Peripherals) நிறுவனம் ரூ.3.36 கோடி சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. அடுத்து சிட்டி டவர்ஸ் ஹோட்டலுக்கு ரூ.2.01 கோடி சொத்து வரி செலுத்தவில்லை. இதில் தனி நபர்களின் பெயர்களும் கூட இடம் பெற்றுள்ளது. டிஎம்பி அன்வர் அலி ரூ.1.70 கோடியும் ரங்கா பிள்ளை ரூ.1.14 கோடியும், பி உஷா ரூ.1.05 கோடியும் வரி செலுத்த வேண்டியுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
இந்தப் பட்டியலில் சென்னைவாசிகளுக்கு பரிச்சயமான பல நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. தேர்ட் ஐஸ் கம்யூனிகேஷன், பச்சையப்பாஸ் டிரஸ்ட் போர்டு அண்ணா அரங்கம் மல்டி பர்ப்பஸ் ஹால், விஎஸ்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ளன. அதேபோல அருணா தியேட்டர், மீனாட்சி மகளிர் கல்லூரி, சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ், ஹோட்டல் பிரசிடென்ட் டவர், கல்யாணி ஜெனரல் ஹாஸ்பிடல், மலபார் ஹோட்டல் - தி ஏசியானா, அபீஜய் சரேந்தரா பார்க் ஹோட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

முதல்முறை
சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்தாதவர்கள் என்று தனியாகப் பட்டியலைப் பொதுவெளியில் வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அடுத்தகட்டமாக இவர்களிடம் இருந்து சொத்து வரியை வசூல் செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்த உள்ளது. வரி செலுத்தத் தவறுபவர்களிடம் இருந்து வரியை வசூல் செய்யச் சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தண்டோரா மூலம் அறிவிப்பு, எச்சரிக்கை நோட்டீஸ், எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டல்கள், நோட்டீஸ் ஓட்டுவது என பல்வேறு வழிமுறைகள் மூலம் வரியை வசூல் செய்யும் முறைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியும், சென்னை மெட்ரோ வாட்டரும் சொத்து வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரியை வசூல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. நிர்வாகச் செலவுகளைச் சமாளிக்கவும், நகரில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரர்களின் பில்களை க்ளியர் செய்யவும் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை முறையாகச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்களிடம் வரி வசூலைத் தீவிரப்படுத்தியுள்ளன.