அதிமுக பாஜக கூட்டணி உறுதி? எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு கேள்விக்கு அண்ணாமலை கொடுத்த பதில்
சென்னை: இன்று டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையயான சந்திப்பு நடந்தது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித் ஷா இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது படுவேகமாக அரசியல் களம் மாறி வருகிறது. பாஜக உடன் கூட்டணியே இல்லை என்று அதிமுக சொல்லி வந்த நிலையில், இப்போது அந்த சூழல் மாறுவது போல இருக்கிறது. டெல்லியில் இன்று அமித்ஷாவை அவரது இல்லத்திற்கே சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தனியாக ஆலோசனை செய்தனர்.

இதற்கிடையே இந்தச் சந்திப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்த நிலையில், அதில் அண்ணாமலை பங்கேற்றார்.
அண்ணாமலை சொல்வது என்ன
அப்போது இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக எதாவது சொல்ல வேண்டும் என்றால் அந்த நேரத்தில் நானே அறிவிப்பேன். ஆனால், இன்று அதுபோல எந்தவொரு அறிவிப்பும் இல்லை. இன்று நடக்கும் எந்தவொரு சந்திப்பையும் முடிச்சுப்போட்டும் கணக்குப் போட்டும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதிகாரப்பூர்வமாக நாட்டின் உள் துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
சட்ட ஒழுங்கு குறித்துப் பேச வேண்டும் என ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் நேரம் கேட்டால் நிச்சயம் நேரம் கொடுப்பார்கள். இதில் அரசியல் கணக்கு எதுவும் இல்லை. அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தில் பாஜகவும் என்டிஏ கூட்டணியும் வளர்ந்து வருகிறது. எங்கள் அனைவரின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான். அதுதான் அனைவரின் விருப்பம்
கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்
என்டிஏ கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கம் தான் இருக்கிறார்கள். கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். நாம் யாரையும் வேண்டாம் எனச் சொல்லப் போவது இல்லை. அதிகாரப்பூர்வமாக யார் வேண்டுமானாலும் உள் துறை அமைச்சரைச் சந்திக்கலாம். அவரும் யாரையும் வேண்டாம் எனச் சொல்லப் போவது இல்லை.
முதல்வருக்குப் பொறாமை
பாஜக சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் என்டிஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அவர்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இஸ்லாமியச் சொந்தங்களுடன் பாஜக எப்போதும் நிற்கும் என்பதையே நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்த நோன்பு விழாவைப் பார்த்து முதல்வரே பொறாமைப்படுகிறார். பாஜக எப்படி இதை நடத்தலாம் எனக் கேட்கிறார். நீங்கள் நடத்தும்போது நாங்கள் நடத்தக்கூடாதா.
திமுக மீது தாக்கு
பாஜகவிலும் பல இஸ்லாமியர்கள் உள்ளனர். எங்கள் கட்சியை வழிநடத்தும் பொறுப்பிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். அப்படியிருக்கும் போது, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை திமுக மட்டும் தான் நடத்த வேண்டும் என யாராவது பட்டா போட்டு கொடுத்துள்ளனரா.. இஸ்லாமியர்கள் அனைவரும் மோடியின் தலைமையை ஏற்றுக் கொண்டனர். இதையெல்லாம் பார்த்த முதல்வர் பொறாமைப்படுகிறார்.












Click it and Unblock the Notifications