Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக திமுக அரசு செய்தது என்ன? - அண்ணாமலை பேச்சும் உண்மை நிலவரமும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் இந்தி எதிர்ப்பு மேகம் தமிழ்நாட்டைச் சூழ ஆரம்பித்திருக்கிறது. திமுக தனது பழைய வேகத்துக்குத் திரும்பியுள்ளது. 'உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்' என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது.

ஆங்கிலத்தை வளர்க்கிறதா திமுக?

ஆங்கிலத்தை வளர்க்கிறதா திமுக?

'இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்' எனத் திமுக தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலைப்பாட்டை ஆதரித்துத்தான் தமிழக மக்கள் திமுகவை ஆட்சிக்கட்டிலிலே அமரவைத்தார்கள். அன்று அண்ணாதுரை முன்வைத்த முழக்கம் இன்றுவரை திமுகவின் பிரதான கொள்கையாக இருக்கிறது.

ஆனால், 'இந்தி எதிர்ப்பு பிரசாரத்தை வைத்து ஏதேனும் அரசியலில் குழப்பம் செய்ய முடியாதா?' என பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை யோசித்து வருகிறார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், திமுகவை எதிர்த்து அவர் முன்வைக்கும் கருத்துகள் அடிப்படை ஆதாரம் இல்லாமல் இருப்பதோடு, 'சரியான புரிதலுடன்தான் அவர் பேசுகிறாரா?' என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அண்ணாமலை சொல்கிறார், 'மறைமுகமாக ஆங்கிலத்தை வளர்ப்பதுதான் திமுகவின் திட்டம். தமிழை இறக்கிவிட்டு ஆங்கிலத்தை வளர்க்க நினைக்கிறது. தமிழுக்கு திமுக செய்தது என்ன?" என்கிறார்.

அண்ணாதுரை அரசியலில் இருந்த காலகட்டத்தில் அண்ணாமலை பிறக்கவே இல்லை என்பதால் அவருக்குக் கடந்தகால வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

மேடையில் வீசிய தமிழ்த் தென்றல்:

மேடையில் வீசிய தமிழ்த் தென்றல்:

திமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் உதயமாகும் வரை ஒரு கட்சியின் தலைவரை 'அக்கிராசனாதிபதி' அவர்களே என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அதைத் தமிழ்ப்படுத்தி 'தலைவர்' என ஆக்கியதே திமுகதான். அதேபோல் 'காரியதரிசி' என்பதை 'செயலாளர்' என மாற்றியது திமுக.

பிரசாரம் என்பதைச் சொற்பொழிவு என்றும் 'கல்யாணம்' என்பதைத் திருமணம் என்றும் 'கலாசாலை' என்பதைக் கல்விக்கூடம் என்றும் 'வைத்தியர்' என்பதை மருத்துவர் என்றும் தேடித் தேடி சொற்களைத் தமிழ் மயமாக்கியது திமுக.

திமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் தோன்றுவதற்கு முன்னால் சங்க இலக்கியங்கள் சர்வகலாசாலையின் சரக்காக இருந்தன. அதாவது மெத்தப் படித்த பண்டிதர்களின் கைகளில் இருந்தது.

அதை உடைத்து, 'வீசும் மெல்லிய பூங்காற்றே' என்றும் 'தேனே திரவியமே' என்றும் அடுக்குமொழியில் ஆர்ப்பரிக்கும் அலைகடல் போல் அண்ணா பேசினால் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர் என்பது வரலாறு. தமிழ்நாட்டின் மேடை கலாசாரம் குறித்து ஆய்வு செய்துள்ள மானுடவியல் அமெரிக்க ஆய்வாளர் பெர்னாட் பேட் (Bernard Bate), அவரது 'Tamil Oratory and the Dravidian Aesthetic' நூலில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அண்ணாமலையோ, மாற்றுக் கருத்துகளை மதிக்கும் வகையில் விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் நூல்களைப் படிப்பதாகச் சொல்கிறார். அதே ரவிக்குமார்தான், பெர்னார்டு பேட் குறித்தும் எழுதி இருக்கிறார். 'அதை முதலில் படியுங்கள்' என்றே அறிவுறுத்த வேண்டி இருக்கிறது.

அடுத்ததாக, 'தமிழுக்காக திமுக என்ன செய்தது?' என்ற அண்ணாமலையின் கேள்விக்கு வருவோம். இதற்குச் சரியான பதிலைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

அண்ணா செய்து என்ன?

அண்ணா செய்து என்ன?

"1968 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார். அதற்கு முன்னால் 67 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்திலிருந்த 'கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற வாசகத்தை அகற்றிவிட்டு, 'தமிழக அரசு' என்று மாற்றினார். மேலும், அதிலிருந்த 'சத்யமேவ ஜயதே' என்பதை 'வாய்மையே வெல்லும்' என அழகாகத் தமிழாக்கினார். 'ஆகாஷ்வாணி'யை 'வானொலி' என்று இனி அழைக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

1968 ஆம் ஆண்டில் தமிழ் சட்டச் சொல் அகராதியை வெளியிட்டார். இதை எல்லாம் கடந்து மெட்ராஸ் என்றிருந்த பெயரை மாற்றி 'தமிழ்நாடு' என்று பெயர் வைத்தார். திருக்குறள் ஆராய்ச்சிக்குச் சிறப்பு நிதி வழங்கினார். இளங்கலை வகுப்பில் தமிழைப் பயிற்று மொழியாக்கினார். பள்ளி, கல்லூரிகளில் தமிழை முதல் பிரிவில் கொண்டுவந்தார். உலகப் பொதுமறையான வள்ளுவருக்கு அரசு சார்பில் முறையான உருவப் படத்தை வெளியிட்டார்" என்கிறார் ம.இராசேந்திரன்.

மு.கருணாநிதி செய்தது என்ன?

மு.கருணாநிதி செய்தது என்ன?

தொடர்ந்து, மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நடந்த தமிழ்ப் பணிகளையும் விளக்கினார். " 1969 ஆம் ஆண்டில் நீதிமன்றங்களில் தமிழ், மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தமிழ், 1970 ஆம் ஆண்டில் தமிழ்ப் பயிற்று மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றைக் கொண்டு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்தையும் அறிமுகம் செய்தார்.

1971 ஆம் ஆண்டில் அரசாணைகளில் தமிழைக் கட்டாயமாக்கினார். 73 ஆம் ஆண்டில் அரசு முத்திரைப் படிவம் மற்றும் விண்ணப்பங்களில் தமிழை அறிமுகம் செய்தார். 1998 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையை உருவாக்கினார். 1999 ஆம் ஆண்டில் தமிழில் மென்பொருளை உருவாக்கித் தந்தார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கி உத்தரவிட்டார். அனைத்து பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்கினார். 'கல்லூரிகளில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெற முடியாது' என்பதையும் உறுதி செய்தார்.

ஒன்றிய அரசுடன் போராடி தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததுடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் நிறுவினார். தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு முன்னுரிமையை அளித்தார். பொறியியலில் தமிழைப் பயிற்று மொழியாக்கினார். தமிழில் வழிபாடு என்பதைப் பெற்றுத்தந்தார்.

கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை எழுப்பினார். கண்ணகிக்குக் கோட்டம் கட்டினார். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். ஊர்ப்பெயர்களைத் தமிழில் மாற்றினார். தமிழ் அறிஞர்களின் வாரிசுகள் மருத்தும் படிக்க இடம் ஒதுக்கித் தந்தார்" எனப் பட்டியலிடுகிறார், இராசேந்திரன்.

மு.க.ஸ்டாலின் செய்து வருவது என்ன?

மு.க.ஸ்டாலின் செய்து வருவது என்ன?

மு.கருணாநிதியின் ஆட்சிக்கு இணையாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே தமிழ் சார்ந்த பல நலத்திட்டங்களைச் செய்து தனித்தன்மையுடன் விளங்குகிறார்.

"இலக்கிய மாமணி என்ற விருது மூலம் 5 லட்ச ரூபாயை அறிவித்து, அதே வேகத்தில் வழங்கியுள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கிறார். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழ்க் கற்க 'தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை' நிறுவி அதற்கான பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளார். மறைந்த தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதையை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் இந்த வாய்ப்பை யாரும் பெற்றதில்லை. முதன்முறையாக எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு இந்த மரியாதையை வழங்க உத்தரவிட்டார். பாரதி நூல்களுக்குச் செம்பதிப்பு, 13 பேருக்கு கலைஞர் செம்மொழி விருதுகளை அறிவித்து அதை நிறைவேற்றியுள்ளார். சங்க இலக்கிய நூல்களை அரசு பதிப்பாக வெளியிடும் திட்டம் எனப் பல உள்ளன. இது சின்ன பட்டியல்தான். இன்னும் பல திட்டங்கள் உள்ளன" என்கிறார் ம.இராசேந்திரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+