3வது ஆள்.. "தலையிடாதீங்க".. போகிற போக்கில் கொளுத்தி போட்ட அதிமுக புள்ளி.. அப்போ மோடி மீட் கிடையாதா?
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக - அதிமுக இடையிலான உறவு குறித்த கேள்விகளையும் இந்த பேட்டி எழுப்பி உள்ளது.
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகிறார். சென்னையில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் 2022 தொடரில் கலந்து கொள்வதற்காக வரும் அவர்.. அதிமுக நிர்வாகிகளை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று மாலை 6.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசும் மோடி அதன்பின் 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று ஓய்வு எடுக்க இருக்கிறார்.

சந்திப்பு
ஆனால் முழுக்க முழுக்க ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வு மட்டுமே எடுக்க மாட்டார். அவர் ஆளுநர் மாளிகையில் சில சந்திப்புகளையும் நடத்த உள்ளார். முக்கியமாக பாஜக நிர்வாகிகளை சந்திப்பார், ஆளுநருடன் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. இது போக தமிழ்நாடு அரசு சார்பாக சில அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து முக்கியமான கோரிக்கைகளை மனுவாக கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பயணத்தில் மோடி அதிமுக நிர்வாகிகளை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

நேரம்
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் இதுவரை மோடி நேரம் கொடுக்கவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பேரையும் மோடி சந்திக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருந்தார். அப்போது மோடியை சந்திக்க எடப்பாடி தீவிரமாக முயன்றார்.

மோடி திட்டம்
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி நேரம் கொடுக்கவில்லை. இதனால் எடப்பாடியும் டெல்லி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு வந்தார். இந்த தொடர் புறக்கணிப்புகள் காரணமாக அதிமுக தலைகள் பாஜக மீது கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி வரை சென்றும் பார்க்க முடியவில்லை. சென்னை வரும் நேரத்திலும் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தானே இருக்கிறோம். நேரம் கொடுக்காமல் இருந்தால் என்ன நியாயம் என்று எடப்பாடி ஆதரவு அதிமுக தலைவர்கள் புலம்பி வருகிறார்களாம்.

ஜெயக்குமார்
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூட, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார். மூன்றாவது நபர் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. பாஜகவிற்கும், பிரதமருக்கும் இது தெரியும். எங்கள் உட்கட்சி விவகாரத்தில் கண்டிப்பாக பிரதமர் மோடி தலையிட மாட்டார் என்று தெரியும் என்று ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுக உட்கட்சி மோதலில் பாஜக தலையிட கூடாது என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆதரவு
ஓ பன்னீர்செல்வத்தை டெல்லி பாஜக ஆதரிப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாகவே எடப்பாடியை மோடி சந்திக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையிட கூடாது என்று ஜெயக்குமார் கூறி இருக்கிறார். அதாவது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுகவில் மாற்றங்களை செய்ய டெல்லி முயல கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நடக்காது?
ஜெயக்குமாரின் இந்த பேட்டியை பாஜக எப்படி எடுத்துக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியில் எடப்பாடிக்கு ஏற்பட்ட புறக்கணிப்பும், ஜெயக்குமாரின் இந்த பேட்டியும் அதிமுக - பாஜக உறவில் சின்ன விரிசல் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் இன்று எடப்பாடி - மோடி சந்திப்பு நடக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் ஓபிஎஸ்ஸை மோடி சந்திக்கவும் வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் பாஜக தலைகளை மட்டும் சந்தித்துவிட்டு மோடி திரும்ப செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications