எடப்பாடி தொடுத்த 6 அஸ்திரங்கள்.. ஓபிஎஸ்ஸின் 5 பதிலடிகள்! அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி யாருக்கு?
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் நேற்றும் இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இந்த வழக்கில் இன்று மொத்தமாக விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் இதுவரை என்ன நடந்தது.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் வைத்த வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

நீதிபதியின் கேள்விகள்
இந்த வழக்கில் நீதிபதி கேட்ட கேள்விகள்
கேள்வி 1 - பொதுக்குழு எப்படி கூடியது. பொதுக்குழு விதிகளின்படி கூடியதா? பொதுக்குழு கூடிய அன்று என்னென்ன விதிகளின் படி கூட்டம் நடத்தப்பட்டது.
கேள்வி 2 - ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாதபட்சத்தில் பொதுக்குழுவை யார் கூட்ட முடியும்
கேள்வி 3 -அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றுதானே விதி. பின்னர் அந்த பதவியை ஏன் கலைத்தீர்கள். பின்னர் அந்த பதவியை மீண்டும் உருவாக்கியது எப்படி.
கேள்வி 4 - பொதுக்குழு சட்டப்படி நடந்ததா என்று எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும்

எடப்பாடி அஸ்திரங்கள்
இந்த வழக்கில் எடப்பாடி தரப்பு வைத்த முக்கியமான 7 வாதங்கள்.
வாதம் 1 - ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிறது. அதே சமயம் பொதுக்குழுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கோரினர். இதனால் அவைத்தலைவர் பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டார்.
வாதம் 2 - . பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

பொதுக்குழு நடந்தது எப்படி?
வாதம் 3 - ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அறிவித்தோம். இது டிவியிலும் காட்டப்பட்டது. அதனால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.
வாதம் 4 - பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி இப்படி காலாவதியாகாது. ஏனென்றால் அதில் சட்ட திருத்தம் எதுவும் செய்யவில்லை.எனவே பொதுக்குழு செல்லும்.

முக்கியமான வாதம்
வாதம் 5 - அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. 2432 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதோடு இவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.
வாதம் 6 - மெஜாரிட்டி உறுப்பினர்கள் வைத்த இந்த கோரிக்கையால் பொதுக்குழு நடத்தப்பட்டது. அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.

ஓபிஎஸ் பதிலடி
இந்த வழக்கில் ஓபிஎஸ் கொடுத்த பதிலடிகள் பின்வருமாறு,
பதிலடி 1 - பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது. அதோடு அவைத் தலைவரை நிரந்தரமாக தேர்வு செய்ததை ஒருங்கிணைப்பாளர் அங்கீகரிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்துவிட்டார். அதனால் இவர் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது செல்லாது.
பதிலடி 2 - பொதுக்குழுவை தலைமை கழக செயலாளர் மற்றும் பொருளாளர் கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாதபட்சத்தில் பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகி கூட்ட முடியும். ஆனால் பொதுக்குழுவில் பதவிகள் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின்றன என்று வாதம் வைக்க முடியாது.
பதிலடி 3 - 5 ஆண்டுகள் இவர்களுக்கு பதவிக்காலம் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று கூறினால் மொத்தமாக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் காலாவதியாகிவிடும்.

பதவி இருக்கிறது இன்னமும்
பதிலடி 4- அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரிக்கவில்லை என்று கூறுவது தவறு. ஏனென்றால் அந்த பொதுக்குழுவில் அப்படி ஒரு தீர்மானமே கொண்டு வரப்படவில்லை.
பதிலடி 5 - பதவிகளை அந்த பொதுக்குழுவில் அங்கீகரிக்கவில்லை என்றால் பதவிகள் காலாவதியாகிவிடும் என்றும் தீர்மானம் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எப்படி காலாவதி யாகும். என்ன விதி எப்படி சொல்கிறது?
என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ளதால் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
