மதிமுக நிர்வாகி பதவி பறிப்பு.. குள்ளநரிகள் சூழ்ச்சி.. ‘பகீர்’ குற்றச்சாட்டு.. மீண்டும் புகைச்சல்!

தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி உருக்கமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வல்லம் பசீர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : மதிமுக வளைகுடா நாடுகளின் அமைப்பாளராக இருந்த வல்லம் பசீர் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக, சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருவது தற்போது மதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மதிமுக தொண்டர் ஒருவர் வளைகுடா நாட்டில் மறைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தந்த விவகாரம் தொடர்பாக வல்லம் பசீர் தெரிவித்த கருத்து, அக்கட்சிக்குள் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தது.

இந்நிலையில், மதிமுக வளைகுடா நாடுகளின் அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் வல்லம் பசீர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து வல்லம் பசீர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வல்லம் பசீர் மீதான நடவடிக்கைக்கு எதிராக மதிமுகவினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

வல்லம் பசீர்

வல்லம் பசீர்

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வல்லம் பசீர், மதிமுகவின் வளைகுடா நாடுகளின் அமைப்பாளர் பொறுப்பை வகித்து வந்தார். அமீரகத்தில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த சேதுராம் என்பவர் திடீரென மரணமடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பசீர் தவறான தகவல்களை வெளியிட்டதாக மதிமுகவில் சிலர் குற்றம்சாட்டினர். மறைந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க வைகோதான் முழுக்காரணம் என்றும், ஒரு சாதி அமைப்புதான் முக்கிய காரணம் என்று கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சிலர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பசீர். இந்த விவகாரத்தால் தான் வல்லம் பசீர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சூழ்ச்சி வலை

சூழ்ச்சி வலை

இந்நிலையில், தான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வல்லம் பசீர். அந்தப் பதிவில், "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து என்னை ஆளாக்கி அழகு பார்த்த தலைவர் வைகோ என்னை பொறுப்பில் இருந்து விடுத்திருக்கிறார். பாச உணர்வுகளால் கட்டியெழுப்பப்பட்ட இலட்சிய மாளிகை மறுமலர்ச்சி திமுக, அந்த மாளிகையில் எனக்கும் இடமளித்து என்னை ஆராதித்து, அன்புக்காட்டி குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னை குன்றின் மேல் இட்ட விளக்காய் அடையாளப்படுத்தி எனக்கு ஒரு முகவரியை தேடி தந்தவர் என் உயிரில் உணர்வில் உதிரத்தில் கலந்திட்ட தலைவர் வைகோ. எத்தனை வாய்ப்புகள், எத்தனை பொறுப்புகள் அத்தனைக்கும் உண்மையாக இருந்து கடமையாற்றியிருக்கிறேன் என்பதை தலைவர் வைகோ அறிவார். ஒரு சிலரது சூழ்ச்சி வலைகளால் இன்று அவரே என்னை பொறுப்பிலிருந்து விடுவிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

சில குள்ளநரிகள்

சில குள்ளநரிகள்

இந்த நடவடிக்கை எடுத்திடும் முன்னும் பின்னும் அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். கடந்த பத்து நாட்களாக என்னுடைய மனப்போராட்டமும் அவருக்கு இப்படியொரு நெருக்கடியான நிலை உருவாகி விட கூடாது என்பது தான். என்ன செய்வது தீர்ப்பை எழுதி விட்டுத்தானே அதனை வாசிக்கும் நேரத்திற்காக சில குள்ளநரிகள் காத்திருந்தன. இந்த ஒரு வார காலமாக 10 மாவட்ட செயலாளர்கள் , ஒரு துணைப் பொதுச் செயலாளர் உட்பட ஆறு தலைமைக் கழக நிர்வாகிகள் , இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை நீக்கச் சொல்லி சிலரது அழுத்தத்தின் பெயரில் அறிக்கை கொடுத்தார்கள். அதையும் கடந்து என்னை பொறுப்பில் இருந்து நீக்கக்கூடாது என்பது தான் வைகோவின் விருப்பம். அதனால் தான் இத்தனை நாட்கள் என் மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார். இறுதியாக இன்று குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறிவிட்டது. தலைவர் வைகோ அவர்களின் மனிதநேய பணியை ஏன் KNA கம்மவார் நாயுடு சங்கத்தின் சாதனையாக சொல்கிறீர்கள் என கேட்டதற்காக எனக்கு இந்த தண்டனை என்றால் நான் இதனை பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வேன்.

துரோகம்

துரோகம்

நான் கண்டதும் கொண்டதும் தலைவர் வைகோ ஒருவரைத்தான், என்னை பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் என் இதயத்திலிருந்து தலைவர் வைகோவை எவராலும் நீக்க முடியாது. என் இரத்தநாளங்களில் இரத்த ஓட்டம் உள்ளவரை அவர் தான் என் தலைவர். இந்த சோதனையான காலம் எனக்கு பலரை அடையாளம் காட்டியது. நெருக்கடியால் சிலர் என்னிடம் பேசி வருத்தம் தெரிவித்துவிட்டு தான் என்னை நீக்கச்சொல்லி அறிக்கை கொடுத்தார்கள். அவர் என் தம்பி, நான் வேறு அவர் வேறு இல்லை என்று சொன்னவர்கள் கூட தங்களது இருப்பை தக்கவைக்க முதுகுக்குப் பின்னால் எனக்கு எதிராக செயல்பட்டதை உணர்த்திடும் அரிய வாய்ப்பாகவே இது அமைந்தது. எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ததன் மூலம் அவர்களுக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைக்குமென்றால் அது எனக்கு மகிழ்ச்சியே.

மனசாட்சி உறங்கவிடாது

மனசாட்சி உறங்கவிடாது

என் மீது அன்பு கொண்டு என்னை ஆறுதல்படுத்திய நிர்வாகிகளுக்கும் , கழக கண்மணிகளுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் உங்கள் ஆறுதல் மொழியால் நான் என்னை பலப்படுத்தி கொண்டேன் என்பது தான் உண்மை. ஒரு சாதாரண தொண்டன் என நினைக்காமல் என்னையும் , என் குடும்பத்தையும் வாஞ்சையோடு அரவணைத்து அன்பு காட்டிய ரேணுகா அம்மாவை நான் உயிருள்ளவரை மறவேன். அந்த அன்புத்தாய் இந்த செய்தி அறிந்து எவ்வளவு துடித்திருப்பார் என எண்ணும் போதே கண்களில் நீர்க்குமிழிகள் சூழ்ந்து கொள்கின்றன. தலைவருக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர் வைகோவின் தளகர்த்தர்கள் பலரை அப்புறப்படுத்திய அதே கும்பல் தான் இன்று என்னையும் இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அந்த கும்பல் இன்று நிம்மதியாக உறங்கிவிட நினைக்கலாம். ஆனால் அவர்களின் மனசாட்சி அவர்களை உறங்கவிடாது இன்று நான் நாளை அவர்களாக கூட இருக்கலாம்.

விளக்கம் அளிப்பேன்

விளக்கம் அளிப்பேன்

மரண தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு கூட இறுதி கருத்தை சொல்வதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இடம் வழங்கியுள்ளது ஆனால் இப்பிரச்சனையில் என் கருத்தை அறியாமலே இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. நான் தவறே செய்திருந்தாலும் என்னிடம் விளக்கம் கோராமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் (அவதூறுகள்) அப்படியே நிலைபெறும் சூழல் உருவாகியிருக்கிறது. அதனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு (அவதூறுகள்) பொதுவெளியில் விளக்கமளித்திட முடிவு செய்துள்ளேன். சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு இயக்கினேன். கட்சிக்குள் குழப்பம் விளைவித்தேன், மாநில பொறுப்பு கேட்டேன், சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கேட்டேன், மாவட்டச் செயலாளர்களை அழைத்து பேசி கட்சிக்கு எதிராக தூண்டிவிட்டேன் போன்ற அவதூறுகளுக்கு ஓரிரு நாட்களில் விளக்கமளிப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.

புகைச்சல்

புகைச்சல்

வல்லம் பசீருக்கு ஆதரவாக மதிமுகவைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, மதிமுக தொண்டரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்க சாதி சங்கம் காரணமல்ல, வைகோவே முழுக் காரணம் என கருத்துத் தெரிவித்ததற்காக மதிமுகவில் சிலரால் திட்டமிட்டௌ சர்ச்சை ஏற்படுத்தப்பட்டு, கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்தின் பேரில் வைகோ, வல்லம் பசீரை பொறுப்பில் இருந்து நீக்கியிருப்பதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்ற பிறகு, முக்கிய நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது மதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+