சென்னை கேளம்பாக்கம் பீச்சில் கேவலம்.. போதையில் மட்டையான தம்பதி.. தவித்த 3 வயது குழந்தை
சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே கடற்கரையோரம் 3 வயது குழந்தையை தவிக்க விட்டு மதுபோதையில் தம்பதி படுத்து தூங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை கடுமையாக எச்சரித்த போலீசார், அதன் பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுக்குடிப்போர் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் உயர்ந்துள்ளது. இளைஞர்கள், வயதானவர்கள், நடுத்தர வயது உடையவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி மது அருந்துகிறார்கள். மது அருந்துவதை ஒரு காலத்தில் அவமானமாக மக்கள் கருதினார்கள். மது அருந்திவிட்டு வந்தால், வீட்டில் அவர்கள் கேவலப்படுவார்கள்..

மது அருந்த போகிறவர்கள் மறைந்து மறைந்து தான் போவார்கள்.. மாட்டிக்கொண்டால் அவமானம், அசிங்கம் என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. மது அருந்தும் யாரும் அதை அவமானமாக கருதுவது இல்லை.. குடிப்பழக்கத்தால் உடல் நிலை பாதிப்பு, வருவாய் பாதிப்பு, சுயநினைவு இல்லாமல் செய்யும் குற்றச்செயல்களை பற்றியும் கவலை இல்லை.
தினமும் மாலையில் குடிப்போர் எண்ணிக்கை மிக மிக அதிமாகி விட்டது. குடிப்பவர்கள் எத்ததனை பேர் என்று ஒரு காலத்தில் ஒரு ஊரில் விரல் விட்டு எண்ணும் நிலை இருந்தது. இன்று எத்தனை பேர் குடிக்காமல் ஒரு ஊரில் உள்ளார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. நிலைமை மாறி உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்களும் கணிசமாக குடிக்கிறார்கள். குடும்பமே சரக்கு பாட்டில் வாங்கி குடிப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட நிகழ்வு போலீஸ் வரை போயிருக்கிறது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே கடற்கரையோரம் கடந்த 16ம் தேதி இரவு 8 மணி அளவில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டே இருந்தது. அந்த வழியே சென்றவர்கள் குழந்தையை அருகில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளனர்.
பின்னர் குழந்தை யாருடையது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.. யாராவது தேடி வந்தால் குழந்தையை ஒப்படைக்குமாறு சொல்லி விட்டு கடைக்காரரிடம் விட்டு சென்றுள்ளார்கள். ஆனால் யாரும் வராததால் கடைக்காரர், இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் அந்த குழந்தையை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் கேளம்பாக்கம் போலீசாருக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரியா (வயது 30) என்ற பெண்ணின் 3 வயது குழந்தை கேளம்பாக்கம் அருகே மாயமானதாக தகவல் வந்தது. அப்போது போலீசார் 3 வயது ஆண் குழந்தை ஒன்றை மீட்டு வைத்திருப்பதாக கூறினார்கள்.
இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையம் வந்த பிரியா மற்றும் அவருடைய கணவர் ஜோதிபாசு, குழந்தையின் அங்க அடையாளங்களை போலீசாரிடம் சொல்லி, அது அவர்களது குழந்தைதான் என உறுதி செய்தார்கள். குழந்தை எப்படி தொலைந்தது என்று விசாரித்த போது திடுக்கிட்டு போனார்கள்..
தம்பதி இருவரும் குப்பை மற்றும் தெருவோரம் வீசப்படும் பாட்டில்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடற்கரையையொட்டிய பகுதியில் பாட்டில்கள் சேகரித்துவிட்டு இருவரும் மது அருந்திவிட்டு போதையில் தூங்கி இருக்கிறார்கள். போதை தெளிந்து எழுந்த பின்னர் குழந்தையை காணவில்லை என்பதை அறிந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு குழந்தையின் தாய் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்த போலீசார், தம்பதியை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். கேளம்பாக்கத்தில் குடிப்பழக்கத்தால் குழந்தையை தொலைத்த தம்பதி, தங்கள் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications