சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே
சென்னை: இன்று சென்னையில் வாடகைக்கு நல்ல வீடு, குறைந்த வாடகையில் கிடைப்பது சவாலாக மாறி உள்ளது. அதேபோல் இன்றைக்கு சென்னையின் முக்கிய பகுதிகளில் ஓரளவு குத்தகை பணத்தில் நல்ல வீடு லீசுக்கு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதனை பயன்படுத்தி தான் பல்வேறு ஆப்கள் வளர்ந்து வருகின்றன. இந்த டிமாண்டை பயன்படுத்தி ஏலம் போகும் அளவிற்கு வீட்டின் பெயரில் கடன் வாங்கியவர்கள், கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் மோசடி செய்கிறார்கள். சென்னை நொளம்பூரில் கைது ஏலம் போன வீட்டை லீசுக்கு விட்டு 20 லட்சம் மோசடி செய்த நபர் சிக்கியுள்ளார். எப்படி ஏமாற்றினார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னையில் வாடகைக்கு அல்லது ஒத்திக்கு வீடு தேடுவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அதிகப்பணத்தை முன்பணமாக கொடுத்து ஒத்திக்கு வீடு பார்ப்பவர்கள் வீடு உண்மையில் அவருடையது தானா. அந்த வீட்டின் பெயரில் கடன் உள்ளதா.. வீடு அடமானத்தில் உள்ளதா.. என்பதை உறுதி செய்வது நல்லது. வெறும் 100 ரூபாய் பத்திரத்தில் உங்களிடம் நிபந்தனைகளை எழுதி அப்படியே ஒரு பத்திரம் போட்டுக்கொடுத்தால் மட்டும் போதாது. இருவரும் வாடகை ஒப்பந்தத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.. அப்படி பதிவு செய்தால் தான் சிக்கல் வராது.. அப்படி பதிவு செய்வது கட்டாயமும் கூட..

ஏனெனில் அடமானத்தில் அல்லது ஏலத்தில் உள்ள வீட்டை உங்கள் தலையில் கட்டி பணம் பார்த்துவிட்டு ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள். சென்னையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் கடந்த 2024ம் ஆண்டு ஆன்லைன் மூலம் முகப்பேர் பகுதியில் வீடு பார்த்துள்ளார். அப்போது முகப்பேர் மேற்கு வள்ளலார் தெருவைச் சேர்ந்த ராஜகோபாலன் (59வயது) என்பவருடைய அறிமுகம் கிடைத்துள்ளது.
ராஜகோபாலன் தனக்கு சொந்தமாக முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள வீட்டை கடலூர் தீபக்கிற்கு ரூ.20 லட்சத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டிற்கு கடந்த 2024ம் ஆண்டு தீபக் குடிவந்துள்ளார். அடுத்த சில மாதங்களிலேயே அந்த வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் வந்துள்ளது.
அதில் வீட்டை தனியார் நிதி நிறுவனத்திடம் கடந்த 2017ம் ஆண்டு ராஜகோபாலன் அடகு வைத்துள்ளார். அதன் மூலம் 79 லட்சம் பணம் பெற்றுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனம் ராஜகோபலனின் வீட்டை ஏலத்தில் விட்டுள்ளது. ஏலத்தில் எடுத்த மற்றொரு நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து வீட்டில் இருந்து தீபக் வெளியேற்றப்பட்டார். ராஜகோபாலனிடம் குத்தகையாக கொடுக்கப்பட்ட 20 லட்சம் பணத்தை திரும்பி கேட்டுள்ளார். ஆனால் ராஜகோபாலன் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான தீபக், நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தலைமறைவான ராஜகோபாலனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜகோபாலன் மீது ஏற்கனவே ஒரு மோசடி வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications