இறுதியாக வாணி ஜெயராமை பார்த்தது எப்போது?.. கான சரஸ்வதி கொடுத்த கடைசி பரிசு.. பணிப்பெண் உருக்கம்
வாணி ஜெயராமை தான் கடைசியாக எப்போது பார்த்தேன் என்பதை கூறிய பணிப்பெண்
சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் கடைசியாக தனக்கு ஒரு பெருமாள் படத்தை கொடுத்ததாக அவரது வீட்டின்பணிப்பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வேலூரில் கலைவாணியாக பிறந்தார். இவரது குடும்பம் ஐயங்கார் குடும்பமாகும். இவர் கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார், டி.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசையை கற்றுத் தேர்ந்தார்.
இசையை பயின்று கொண்டே சிலோன் வானொலியில் லதா மங்கேஷ்கர், முகமது ரவி, மன்னா டே ஆகியோரின் பாடல்களை கேட்டு தானும் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை வாணி ஜெயராமுக்கு ஏற்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி
இவர் சென்னையில் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இவருக்கு வேலை கிடைத்தது. திருமணத்திற்கு பிறகு பணி மாறுதல் வாங்கிக் கொண்டு மும்பையில் வசித்தார். வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் கணவராக ஜெயராம் இருந்தார். இதையடுத்து வாணி, உஸ்தாத் அஹ்மத் கானிடம் இந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டார்.

இசை மீது ஆர்வம்
இந்த நிலையில் இசை மீதான அதீத ஆர்வம் காரணமாக வாணி ஜெயராம் தனக்கு கிடைத்த வங்கி வேலையை ராஜினாமா செய்தார். 1971 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வெளிவந்த குட்டி என்ற இந்தி படத்தில் வசந்த தேசாயின் இசையில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலை பாடினார். அந்த பாடல் நாயகி ஜெயா பாதூரிக்கு (தற்போது ஜெயா பச்சன்) பெரும் டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது.

தீர்க்க சுமங்கலி
இதையடுத்து 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி எனும் படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடலை வாணி ஜெயராம் பாடியியிருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பாடல் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் இவரது குயில் போன்ற குரலை கேட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க காத்திருந்தனர். அந்த வகையில் வாணி ஜெயராமின் குரல் தனித்துவமாக இருந்தது.

பத்ம விருதுகள்
இவருக்கு அண்மையில்தான் பத்ம விருது வழங்கப்பட்டது. இதையொட்டி வாணி ஜெயராமுக்கு வாழ்த்துகள் குவிந்தன. பிரபலங்கள் நேரில் வந்தும் போனில் பேசியும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் வாணி ஜெயராம் தனது வீட்டில் மர்மமான முறையில் காயமடைந்துள்ளார். அவருக்கு தலையில் காயம் இருந்ததால் சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாணி ஜெயராம்
வாணி ஜெயராமுக்கு என்ன நடந்தது என்பதை அவரது பணிப்பெண் விளக்கியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் வாணி ஜெயராம் வசித்து வந்தார். அவரது கணவர் ஜெயராம் 2, 3 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால் வாணி தனியே வசித்து வந்தார். இதுகுறித்து வீட்டு பணிப்பெண் மலர்க்கொடி கூறுகையில் நான் தினமும் காலை 10.30 மணிக்கு அவரது வீட்டுக்கு வருவேன்.

போன் செய்தேன்
பின்னர் வேலைகளை முடித்துவிட்டு 12.30 அல்லது பகல் 1 மணிக்கு செல்வேன். அப்படித்தான் இன்று (நேற்று) அவரது வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தேன். மொத்தம் 5 முறை அடித்து பார்த்தேன். திறக்கவே இல்லை. இதையடுத்துதான் அவருடைய நம்பருக்கு போன் செய்தேன். அதற்கும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. உடனே எனது கணவருக்கு போன் செய்து அவரை அம்மாவுக்கு (வாணி) போன் செய்யுமாறு கூறினேன்.

போனை எடுக்காத வாணி ஜெயராம்
அவர் போன் செய்த போதும் அம்மா எடுக்கவில்லை. இதனால் கீழ் வீட்டிலிருந்தவர்களிடம் கூறினேன். அவர்கள் வாணி அம்மாவின் சகோதரி உமாவுக்கு தகவல் கூறினார். வாணி அம்மாவுடன் பொறந்தவர்கள் 11 பேர். அதில் தற்போது இருப்பது உமா அம்மா மட்டும்தான். உமா அம்மாவிடம் உள்ள எக்ஸ்ட்ரா சாவி மூலம் வீட்டை திறந்து பார்த்த போது அவருக்கு தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார்.

பரிசோதித்த மருத்துவர்கள்
இதுகுறித்து போலீஸாருக்கு போன் செய்தோம். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வாணி அம்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. என்னிடம் தாயை போல் பழகுவார். யாரையும் அதிர்ந்து கூட பேச மாட்டார். ஜெயராம் ஐயா போன பிறகு தனியாகத்தான் வசித்து வந்தார். அவர் உடல்நலம் எல்லாம் பாதிக்கப்படவில்லை. நன்றாகத்தான் இருந்தார். எந்த நோய்க்கும் அவர் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை. ஆரோக்கியமாகவே இருந்தார்.

கடைசியாக பார்த்தது எப்போது
ஏதாவது பொருட்களை வாங்க வேண்டும் என்றால் என்னிடம் கேட்பார், நான் வாங்கி வந்து கொடுத்துவிடுவேன். கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்காக தானே எழுதிய பாடலை பாடியிருந்தார். அதுதான் அவரது கடைசி பாடல். எனக்கு பிப்ரவரி 3ஆம் தேதி ஒரு பெருமாள் படத்தை கொடுத்தார். அப்போதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு இப்போது இறந்துவிட்டார் என உருக்கமாக தெரிவித்தார்.

சந்தேக மரணம்
தலையில் காயம் இருந்ததால் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே அவருக்கு என்னவாயிற்று என்பது தெரியவரும். வாணி ஜெயராமின் மரணம் ரசிகர்களையும் திரை பிரபலங்களையும் உலுக்கி போட்டுள்ளது. நேற்று வாணி இறந்தவுடன் ஒய்.ஜி. மகேந்திரனும், அனிருத்தின் தாயும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வீட்டில் பாடகி சுஜாதா, நடிகர் சிவக்குமார், பாடகி சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications