வெள்ளிக்கிழமை ஆனாலே கிளாம்பாக்கத்தை கையிலேயே பிடிக்க முடியாது.. மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகப்படியான சிறப்பு பேருந்துகள் விட வேண்டிய அளவிற்கு சென்னைக்கு வெளியூர் மக்கள் வந்துவிட்டார்கள்.. கிளாம்பாக்கத்தில் நேற்று என்ன நடந்தது? கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம்.

சென்னை கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ம் தேதி திறந்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக விமான நிலையத்திற்கு நிகராக வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தான் இனி சென்னையின் முக்கிய பேருந்து நிலையம்.

What happened yesterday in Kilambakkam bus stand? what Tamil Nadu govt should do in Kilambakkam?

சென்னைக்கு வரும் அத்தனை பேரும் கிளாம்பாக்கத்தில் இறங்கி தான் மாறி நகருக்குள் செல்கிறார்கள். மேலும் கிளாம்பாக்கம் வந்து தான் தங்கள் ஊருக்கு செல்கிறார்கள். மாதவரத்தில் ஒரு பேருந்து நிலையம் இருந்தாலும், அந்த பேருந்துகளும் கிளாம்பாக்கம் வந்து தான் செல்கிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தான் சென்னையின் பெரும்பாலான மக்கள் வந்து பேருந்து ஏறுகிறார்கள்..

இப்போது உள்ள சிக்கல் என்ன வென்றால், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) சுமார் 2 கோடி மக்கள் வசிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் சுமார் ஒரு கோடி பேர் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இதில் பலர் ரேஷன் கார்டு, முகவரி மாற்றம் என எதையும் செய்யாமல் சொந்த ஊரின் பெயரிலேயே இருக்கிறார்கள்.

வேலைக்காக வந்தவர்கள், கல்விக்காக வந்தவர்களே அதிகம்.. சென்னையில் ஐடி நிறுவனங்களில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் உடல் உழைப்பு தொழிலிலும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் சென்னையில் ஈடுபடுகிறார்கள். சொந்த ஊரில் குடும்பங்கள் இருப்பதால், வாரா வாரம் சொந்த ஊருக்கு பலரும் செல்கிறார்கள்.

சென்னையில் வெறும் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேர் போகிறார்களா என்றால் இல்லை.. பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னையில் இருந்து பல்லாயிரம் பேர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.. அப்படி செல்பவர்களுக்காக சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சிறப்பு பேருந்துகள் போதவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.. சிறப்பு பேருந்துகளை பொறுத்தவரை கூட்டத்தை பொறுத்துதான் பேருந்துகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

ஆனால் நேற்றைய பிரச்சனைக்கு காரணம்.. இன்று இரண்டாவது சனிக்கிழமை பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை, நாளை ஞாயிறு என்பதால் நாளையும் விடுமுறை.. இரண்டாவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கும் விடுமுறை, இதன் காரணமாக பலரும் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு பயணிக்க நேற்று கிளாம்பாக்கம் வந்துள்ளனர். அதிகப்படியான மக்கள் வந்த நிலையில், போதிய பேருந்துகள் உடனடியாக இயக்கப்படாததால் மக்கள் கோபம் அடைந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதுதான் நேற்று நடந்துள்ளது.

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், "திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்ன தேவை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்,ஏடிஎம்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.. அதேபோல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிப்பாக மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அதற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளைவிட வேண்டும். அதேநேரம் திடீரென அதிகரிக்கும் எண்ணிக்கையை சமாளிக்கும் அளவுக்கு சிறப்பு பேருந்துகளை தயாராக வைத்திருக்கலாம்.

ஏனெனில் இனி எதார்த்தமான ஒன்றாக மாறும் . எந்த ஊருக்கு அதிகப்படியான மக்கள் வந்துள்ளார்கள் என்பதை அறிய வழிமுறைகளை உருவாக்கி, அவர்களுக்கு சிரமம் தராமல் தீர்வுகளை உடனுக்குடன் உருவாக்கலாம். ஏனெனில் வெள்ளிக்கிமையானாலே கிளாம்பாக்கத்தை கையிலேயே பிடிக்க முடியாது.. அதற்கு தகுந்தாற் போல் மாற வேண்டியதே காலத்தின் கட்டாயம். இனி அதுதான் எதார்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+