அடிமடியிலேயே வேட்டு.. பாஜக பிளானால் ‘ஷாக்’ ஆன சீனியர்.. ஒண்ணுமே கிடைக்காதா? அவங்களால ஓவர் டென்ஷன்!
சென்னை : பாஜக தமிழ்நாட்டில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளை டார்கெட் செய்திருப்பதாக எல்.முருகன் கூறியது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரை டென்ஷன் ஆக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தென்சென்னை உள்ளிட்ட 9 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தெரிவித்துள்ளார்.
தென்சென்னை அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் எம்.பியாக இருந்த தொகுதி. 2019 தேர்தலிலும் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த நிலையில், அந்த தொகுதியை பாஜக குறிவைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் டார்கெட் 9
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய அளவில் 150 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெறாத அதேநேரத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள தொகுதிகளாக இந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 150 தொகுதிகளில் தமிழ்நாட்டில் தென் சென்னை உள்பட 9 நாடாளுமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.

தென் சென்னை
இதில் எல்.முருகன் தென்சென்னை தொகுதியை குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தென்சென்னையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது ஜெயக்குமார் தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஜெயக்குமார், பாஜகவுடனான கூட்டணியை விரும்பவில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மகன் நின்ற தொகுதியை தற்போது பாஜக குறிவைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்து
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2021 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தனது தோல்விக்கு பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு கிடைக்காததே காரணம் என ஏற்கனவே அவர் முனுமுனுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் ராஜ்யசபா இடங்கள் காலியானபோது தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஜெயக்குமார். ஆனால் சிவி சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டது. இந்நிலையில், தனது மகனுக்கு 2024ல் எம்.பி சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பி வருகிறார். இந்நிலையில், பாஜகவின் திட்டம் ஜெயக்குமார் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடிவு செய்யவேண்டியது நாங்கள்
இந்நிலையில் இதுதொடர்பாக ஜெயக்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளும் தொகுதிகள் கேட்பது காலங்காலமாக நடைமுறை. அந்தவகையில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இந்த தொகுதிகளில் நிற்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், இந்த இந்த தொகுதிகள் வேண்டும் என்று பாஜக கேட்கலாம். ஆனால், அதை கொடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சக்தி என்பது அதிமுகவுக்குத் தான் உண்டு.

ஜெயக்குமார் திட்டவட்டம்
பாஜகவில் அவர்கள் கட்சிக்காரர்களை வேகப்படுத்துவதற்காக இதுபோல பல கருத்துகளைச் சொல்லலாம். ஆனால், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு என்பதை ஒதுக்குவது அதிமுக தான். அதிமுக சார்பில் அமைக்கப்படும் தொகுதி பங்கீட்டு குழு தான் அதனை முடிவு செய்யும். இப்போதைக்கு அதை பாஜகவும் முடிவு செய்ய முடியாது, அதிமுகவும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications